கட்டிமுடித்து ஓராண்டு கடந்த பின்னரும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி: தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்

செய்யூர்: செய்யூர் அருகே முதலியார்குப்பத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், 20 லட்சத்தில் கூடுதலாக கட்டி முடிக்கப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஓர் ஆண்டாகியும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சி 3வது வார்டில் முதலியார்குப்பத்தி.ல 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இதில் இருந்து விநியோகம் செய்யப்படும் குடிநீரில் அப்பகுதியில் உள்ள சிலர் அதிக பள்ளம் தோண்டி குடிநீர் பிடிப்பது மற்றும் சிறுசிறு மோட்டார்கள் வைத்து குடிநீரை உறிஞ்சி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இதனால், பெரும்பாலானோருக்கு சரிவர குடிநீர் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்பகுதி மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கூடுதல் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தனர். அதன்படி கடந்த 2019 - 20ம் ஆண்டு 20 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இந்த புதிய குடிநீர் நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆனபிறகும், இதுவரை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் இதுவரை குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே, அப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்னையை போக்க கட்டி முடிக்கப்பட்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: