மகளிர் ஹாக்கியிலும் அரையிறுதிக்கு முன்னேற்றம் இந்தியா வரலாற்று சாதனை

டோக்கியோ: ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்திய நிலையில், மகளிர் அணியும் வலுவான ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்குதான் முதல் இடம். எட்டு முறை தங்கப் பதக்கம் வென்று ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும், 1980ம் ஆண்டுக்கு பிறகு பெரிய அளவில் சாதிக்க முடியாமல் தடுமாறி வந்த ஆண்கள் அணி இம்முறை 49 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது. அதே சமயம் நடப்பு ஒலிம்பிக் போட்டியின் மகளிர் ஹாக்கியில் இந்திய அணி ஹாட்ரிக் தோல்வியுடன் தள்ளாடியதால் பெரிய அளவு எதிர்பார்ப்பு இல்லை.

லீக் சுற்றின் முதல் 3 ஆட்டங்களில் நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து அணிகளிடம் மண்ணைக் கவ்வியதால் இந்தியா காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு கேள்விகுறியானது. ஆனால், அடுத்த 2 ஆட்டங்களில் அயர்லாந்து, தென் ஆப்ரிக்கா அணிகளை வீழ்த்தி அசத்தலாக ஏ பிரிவில் இருந்து காலிறுதியை உறுதி செய்து ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில், நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொண்டது. பி பிரிவில் இடம் பெற்றிருந்த ஆஸி. அணி லீக் சுற்றில் ஸ்பெயின், அர்ஜென்டினா, நியூசிலாந்து, சீனா, ஜப்பான் என மோதிய அனைத்து அணிகளையும் வீழ்த்தி முதல் இடத்தை பிடித்தது.

அதனால், வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா கவுரமாகத் தோற்றாலே பெரிய விஷயம் என பெரும்பாலான விமர்சகர்கள் கணித்திருந்தனர். அந்த கணிப்பை பொய்யாக்கும் விதமாக, கடந்த 2 ஆட்டங்களில் பெற்ற வெற்றி தந்த உத்வேகத்துடன் ஆஸி. அணிக்கு எதிராக அமர்க்களமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் இந்திய வீராங்கனைகள். பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, எதிரணி வீராங்கனைகளை ஏமாற்றி லாவகமாக கடத்திச் செல்வது, கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்துவது மற்றும் தற்காப்பு ஆட்டம் என அனைத்து வகையிலும் இந்திய வீராங்கனைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு ஆஸி. அணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

முதல் கால்பகுதி ஆட்டம் கோலின்றி சமனில் முடிந்த நிலையில், 2வது கால் பகுதியில்  கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் (22வது நிமிடம்) இந்திய வீராங்னை குர்ஜித் கவுர் அபாரமாக கோலடித்தார். அதனால் 2வது கால்பகுதி முடிவில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. அந்த முன்னிலை தொடர்ந்து 3வது கால் பகுதியின் முடிவிலும் நீடித்தது. இந்தியாவின் தற்காப்பு அரண் மிக வலுவாக இருந்ததால் ஆஸி. வீராங்கனைகள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. குறிப்பாக, கோல் கீப்பர் சவிதா மிகவும் துடிப்புடன் செயல்பட்டு பல கோல் வாய்ப்புகளை தடுத்து அசத்தினார்.

பரபரப்பான 4வது  கால் பகுதியிலும் ஆஸி. அணியால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸி.யை வீழ்த்தி முதல் முறையாக ஒலிம்பிக் அரையிறுதிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்தது. ஆண்கள், மகளிர் என 2 பிரிவுகளிலும்  இந்திய ஹாக்கி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது பதக்கத்திற்கான வாய்ப்புகளை அதிகரித்திருக்கிறது. கூடவே தேசிய விளையாட்டில் இந்திய அணிகள் வெற்றிக்கொடி நாட்டி வருவது இந்திய ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது. இந்திய மகளிர் ஹாக்கி அணி நாளை நடக்கும் அரையிறுதியில்  அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது. இந்திய ஆடவர் அணி இன்று நடக்கும் அரையிறுதியில் நடப்பு உலக சாம்பியன் பெல்ஜியத்தை எதிர்த்து விளையாடுகிறது.

* உலக தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள இந்தியா, 2வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணியை போராடி வென்றது.

* 22வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் குர்ஜித் கவுர் அபாரமாக கோல் அடித்தார்.

* இதுதான் முதல்முறையா?

இந்திய மகளிர் ஹாக்கி அணி 3வது முறையாக ஒலிம்பிக் களத்தில் விளையாடுகிறது. முதல் முறையாக 1980ல் இந்திய அணி மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றது. அப்போது ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடைபெற்றன. மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற போட்டியில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை அடுத்த அணியுடன் மோதியது. அதில் முதல் 3 இடங்களை பிடித்த ஜிம்பாப்வே, செக்கோஸ்லோவாக்கியா (இப்போது செக் குடியரசு, ஸ்லோவாக்கியா நாடுகளாக பிரிந்துள்ளன), சோவியத் ரஷ்யா ஆகியவை முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றன. அடுத்த 3 இடங்களில் இந்தியா, அயர்லாந்து, போலந்து ஆகிய அணிகள் இருந்தன. அதாவது இந்தியா 4 வது இடம் பிடித்தது. அப்போது அரையிறுதி போட்டி நடைபெறவில்லை. அதனால் இப்போது 3வது முறையாக ஒலிம்பிக்கில் விளையாடும் இந்திய மகளிர் அணி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றபோது 12வது இடத்தை பிடித்தது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற போட்டியில் கடைசி இடம் பிடித்து பரிதாபமான நிலையில் இருந்த இந்தியா, தற்போது அரையிறுதிக்கு முன்னேறி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

* ஹாக்கி ரொம்ப லேட்

ஒலிம்பிக் போட்டிகள் 1896ம் ஆண்டு (ஏதென்ஸ்) முதல் நடைபெற்று வருகின்றன. ஆனால், ஆடவர்களுக்கான ஹாக்கி போட்டிகள் தாமதமாக 1908ம் ஆண்டுதான் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது. அதிலும் இந்திய ஆடவர் அணி கொஞ்சம் தாமதமாக 1928ம் ஆண்டுதான் ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக்கில் களமிறங்கியது. ஆனால் முதல் போட்டியிலேயே இந்தியா தங்கம் வென்றது வரலாறு. மகளிருக்கான ஹாக்கி போட்டி, மிகவும் தாமதமாக 1980ம் ஆண்டுதான் மாஸ்கோ ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது. அதாவது ஆடவர் ஹாக்கி அறிமுகமாகி 72 ஆண்டுகள் கழித்துதான் மகளிர் ஹாக்கி ஒலிம்பிக்கில் இடம்பிடித்தது.

Related Stories: