தமிழக சட்டப்பேரவையில் திருவுருவ படத்தை திறந்துவைத்து கலைஞருக்கு ஜனாதிபதி புகழாரம்: தனி முத்திரை பதித்த தலைவர்; வாழ்நாள் முழுவதையும் மக்கள் நலனுக்காக அர்ப்பணித்தவர் என பாராட்டு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கலைஞரின் படத்தை திறந்து வைத்து பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவருக்கு புகழாரம் சூட்டினார். கலைஞர் தனி முத்திரை பதித்த தன்னிகரற்ற தலைவர் என்றும் தனது வாழ்நாள் முழுவதையும் மக்கள் நலனுக்காகவே அர்ப்பணித்தவர் என்றும் பாராட்டு தெரிவித்தார். தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவப்பட திறப்பு விழா சென்னை தலைமை செயலக சட்டமன்ற பேரவை மண்டபத்தில் நேற்று நடந்தது.

இதில் பங்கேற்பதற்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். இதற்காக காலை 10 மணிக்கு டெல்லியிலிருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான தனி விமானத்தில் புறப்பட்ட அவர் பகல் 12.45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தார். அங்கு அவருக்கு தமிழக அரசின் சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் அமைச்சர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.

இதையடுத்து, 12.55 மணிக்கு குண்டு துளைக்காத காரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கிண்டி ராஜ்பவன் புறப்பட்டு சென்றார். அங்கு அவர் ஓய்வு எடுத்தார். பின்னர் அங்கிருந்து அவர் 4.40 மணியளவில் விழா நடைபெறும் தலைமை செயலகத்திற்கு புறப்பட்டு வந்தார். சரியாக 4.56 மணிக்கு தலைமை செயலகம் வந்தார். அவருடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் வந்தார். தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து அவர் 5 மணியளவில் சட்டப்பேரவைக்குள் வந்தார். தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை வரவேற்று பொன்னாடை போர்த்தி, புத்தகம் வழங்கினார். அதன் பிறகு தலைமை செயலகம் வடிவிலான நினைவு பரிசையும் வழங்கினார். இதைத் தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு புத்தகம் மற்றும் நினைவு பரிசுகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தகம் மற்றும் நினைவு பரிசு வழங்கினார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு வரவேற்புரை நிகழ்த்தினார். அதன் பிறகு  சரியாக 5.15 மணியளவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் திருவுருவப்படத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் பன்வாரிலால் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

அதன் பிறகு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விழா பேருரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழில் சில வார்த்தைகளுடன் எனது உரையைத் தொடங்க விரும்புகிறேன். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் கலைஞர் திருவுருவப்படத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையில் இது ஒரு முக்கியத்துவம் மிக்க நாள். இதற்கு முன்பு மெட்ராஸ் சட்டமன்ற கவுன்சில் என்று பெயரிடப்பட்டிருந்த அவையின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

 மெட்ராஸ் சட்டமன்ற கவுன்சிலின் வரலாறு 1861ம் ஆண்டு காலத்தையது என்பதை  நீங்கள் அறிவீர்கள். ஆலோசனை அமைப்பாக அக்காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த  அமைப்புதான் 1921ம் ஆண்டில் சட்டத்தை இயற்றும் சட்டப்பேரவையாக  உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா,  ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, லட்சத்தீவு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய  மெட்ராஸ் பிரசிடென்சியின் மக்களால் இந்தப் புதிய தொடக்கம்  வரவேற்கப்பட்டது. மெட்ராஸ் சட்டமன்றம் ஒரு முழுமையான பிரதிநிதித்துவ ஜனநாயக வடிவ ஆட்சியாளுமைக்கான விதைகளை விதைத்தது. நாட்டு விடுதலைக்குப் பிறகு இதற்கான பலன்கள் கிடைத்தன. தேவதாசி முறையை ஒழித்தல், விதவை மறுமணம், பள்ளிகளில் மதிய உணவு, நிலமற்றவர்களுக்கு விவசாய நிலம் விநியோகம் ஆகியவை சமூகத்தை மாற்றியமைத்த சில புரட்சிகர எண்ணங்களாகும்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் ஒரு சில வரிகளை இங்கே நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன்: மந்திரம் கற்போம் வினைத்தந்திரம் கற்போம், வானை யளப்போம், கடல் மீனை யளப்போம், சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம், சந்தித்தெரு பெருக்கும் சாத்திரம் கற்போம் என்று பாடினார். இதை, வேதம், அறிவியல் இரண்டையும் கற்றுக்கொள்வோம். நாம் வானத்தையும், பெருங்கடல்களையும் ஆராய்வோம். நிலவின் இயல்புகள் என்னவென்று நாம் தெரிந்து கொள்வோம். நமது தெருக்களைத் தூய்மையாக்குவது குறித்தும் அறிந்து கொள்வோம் என்று விளக்கலாம்.

ராஜாஜிக்கு பின்வந்தவர்களில் கலைஞர்தான் நீண்ட காலம் ஆட்சி செய்தார். இதனால் தமிழ்நாட்டில் ஒரு தனி முத்திரை பதித்துச் சென்றார். இந்த புகழ்பெற்ற மண்டபத்தில் தம்முடைய வாழ்நாள் முழுவதையும் மாநிலத்தின் மக்கள் நலனுக்காக அர்ப்பணித்த கலைஞரின் உருவப்படமும் இருக்கும். இந்தியா, விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருந்தபோது, ‘கலைஞர்’ தனது இளமைப் பருவத்திலேயே, ​​தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் சமீபத்தில் தான் நம்மை விட்டுப் பிரிந்தார்.

உயர்ந்த லட்சியங்களுடன் கூடிய சிறுவனாக இருந்தபோது, ​​தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஏழை, எளிய மக்களுக்காக அவர் பணியாற்றத் தொடங்கியபோது ​​நீண்டகாலமாக வெளிநாட்டு ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியா, அந்நிய ஆட்சியாளர்களால் சுரண்டப்பட்டு வறுமையிலும் கல்வியறிவின்மையாலும்,  சிக்கலில் இருந்தது. அவர் தமது இறுதி மூச்சின் போது, ​​இந்த மண்ணும் இதன் மக்களும் அனைத்து துறைகளிலும் வியக்கத்தக்க முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் அடைந்துள்ளதாக திருப்தி அடைந்திருக்க வேண்டும். தமது நீண்ட கால, ஆக்கபூர்வமான வாழ்க்கையில் தாம் விழித்திருக்கும் ஒவ்வொரு கணத்தையும் மாநில மக்களின் சேவைக்காகவும், தேசத்தின் சேவைக்காகவும் செலவிட்டோம்  என்பதும் அவருக்கு திருப்தியளித்திருக்கும்.

கலைஞரின் தாய்மொழி வழிபாட்டுக்குரியது. தமிழ் நிச்சயமாக மனிதகுலத்தின் மிகச்சிறந்த மிகப் பழமையான மொழிகளுள் ஒன்றாகும். உலகம் முழுமையும் அதன் வளமான பாரம்பரியத்தில் பெருமை கொள்கிறது. ஆனால், அது செம்மொழியாக அதிகாரபூர்வ அங்கீகாரம் பெறுவதை உறுதி செய்தவர் கலைஞர். விடுதலை பெற்று 75வது ஆண்டு நிறைவை நாடு கொண்டாடும் போது ​​இத்தகைய தலைவர்கள் குறித்தே எனது எண்ணங்கள் செல்கின்றன. நமது தேசிய இயக்கம் 1857 அல்லது அதற்கு முன்பே தொடங்கி 1947 வரை நடைபெற்றது. இந்த காலகட்டத்தில், தீவிரவாதிகளும், புரட்சியாளர்களும் இருந்தனர். சமாதானவாதிகளும், அரசியலமைப்புவாதிகளும் இருந்தனர். அவர்கள் வெவ்வேறு முறைகளைக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு வெவ்வேறு தொலை நோக்குப் பார்வைகள் இருந்தன.

ஆனால், அவர்கள் தாய்நாட்டின் மீது கொண்ட மதிப்பிலும், மரியாதையிலும் ஒன்றுபட்டிருந்தனர். ஒவ்வொருவரும் அவரவர் வழியில் இந்திய தாய்த்திரு நாட்டிற்குச் சேவை செய்ய பாடுபட்டனர். ஒரு ஆற்றில் வெவ்வேறு கிளை நதிகள் ஒன்றிணைவது போல அவர்கள் அனைவரும் நாட்டு விடுதலைக்காக ஒன்றிணைந்தனர். அவர்கள் அனைவரும் காந்திஜியில் ஒரு சங்கமத்தைக் கண்டனர். அவருடன் தேசபக்தர்கள், வழக்கறிஞர்கள், அறிஞர்கள், சமூக சீர்திருத்தவாதிகள், மத, ஆன்மீகத் தலைவர்கள் மற்றும் பலர் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஈடு இணையற்றவர்கள். பி.ஆர்.அம்பேத்கரைப் பற்றி சிந்தியுங்கள். எத்துணை உயர்ந்த மேதை. எத்தகைய தொலைநோக்கு.

அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்கை ஆற்றியது போல், நாட்டை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வதில் நாம் ஒவ்வொருவரும் நம் பங்கை ஆற்ற வேண்டும். நமது சமீபத்திய வரலாற்றில் இளம் தலைமுறையினர் அதிக ஆர்வம் காட்டுவதை நான் காண்கிறேன். இந்த நூற்றாண்டில் இந்தியா தனது ஞானத்தால் உலகிற்கு வழி காட்டும். இவ்வாறு ஜனாதிபதி பேசினார். விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, திக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொது செயலாளர் வைகோ, பாஜ தலைவர் அண்ணாமலை, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பாமக தலைவர் ஜி.கே.மணி, விசிக தலைவர் திருமாவளவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, ஆவுடையப்பன், தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்ட எம்பிக்கள், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் துணை சபாநாயகர் பிச்சாண்டி நன்றிரையாற்றினார். சரியாக விழா 6 மணியளவில் முடிவடைந்தது. நிகழ்ச்சிக்கு வந்த ஜனாதிபதியை முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு அவர் இரவு ஓய்வு எடுத்தார். தொடர்ந்து இன்று காலை விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி செல்கிறார். நாளை 4ம் தேதி வெல்லிங்டன் பாதுகாப்பு சேவை ஊழியர்கள் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 5ம் தேதி ஓய்வெடுக்கும் அவர் 6ம் தேதி காலை டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி வருகையையொட்டி சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

* முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஜனாதிபதி தமிழில் பேச்சு

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சட்டப்பேரவையில் கலைஞரின் திருவுருவப்படத்தை திறந்துவைத்து ஆங்கிலத்தில் தன்னுடைய உரையை தொடங்குவார் என எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் தனது தொடக்க உரையை தமிழில் தொடங்கினார். அப்போது, ‘இன்றைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் கலைஞர் மு.கருணாநிதியின் திருவுருவப்படத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உண்மையில் இது ஒரு முக்கியத்துவம் மிக்க நாள்’ என தமிழில் உரையை தொடங்கினார்.

* கட்சி பேதம் இன்றி அழைப்பு

கலைஞர் திருவுருவப்படத்திறப்பு விழாவிற்கு, தமிழக அரசு சார்பில் கட்சிபேதம் இன்றி அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், பாமக தலைவர் ஜி.கே.மணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் கலைஞர் படத்திறப்பு விழாவில் கலந்துகொண்டனர். மொத்தம் 318 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

* பேனர் இல்லா படத்திறப்பு விழா

முதல்வர் மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு நிகழ்ச்சிகளின்போது பேனர் வைக்கக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். முதல்வரின் உத்தரவுப்படி கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பேனர் வைப்பது தொடர்ந்து தவிர்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று தலைமை செயலகத்தில் கலைஞரின் திருவுருவப்படத்திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமை செயலகம் மற்றும் தலைமை செயலக சாலைகளின் இருபுறங்களில் வண்ண விளக்குகள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. எந்த ஒரு இடத்திலும் பேனர் இல்லாத ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாக கலைஞர் திருவுருவப்படத் திறப்பு விழா அமைந்தது.

* கலைஞரின் பேச்சை ஆர்வமுடன் கேட்ட பிரமுகர்கள்

படத்திறப்பு விழா 5 மணியளவில் தொடங்கியது. ஆனால், 3.30 மணி முதலே எம்.பிக்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பேரவைக்கு வரத் தொடங்கினர். அப்போது, 4 மணியளவில் கலைஞரின் உரை ஒன்று பேரவையில் ஒலிபரப்பப்பட்டது. அந்த உரை, திருவள்ளுவரின் உருவப்படம் திறப்பு குறித்து கலைஞர் பேசுவதாக அமைந்திருந்தது. கலைஞரின் பேச்சை சட்டப்பேரவை நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து பிரமுகர்களும் ஆர்வமுடன் கேட்டனர்.

Related Stories: