தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் படத்தை ஜனாதிபதி திறந்து வைத்ததில் மகிழ்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!

சென்னை: கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை ஜனாதிபதி திறந்து வைத்ததை கண்டு நெகிழ்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்தார். வாழ்நாளில் அரை நூற்றாண்டுக்கு மேலாக சட்டமன்றத்தில் இருந்த மாபெரும் தலைவர் கலைஞர் கருணாநிதியின் உருவப்படம் சட்டபேரவையில் திறக்கப்பட்டுவிட்டது. புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்த விழாவில் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வராக 5 முறையும் சட்டமன்ற உறுப்பினராக 13 முறையும் இருந்தவர் கருணாநிதி. சீர்திருத்த சட்டங்களை இயற்றி தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர், எம்எல்ஏ என பல பதவிகளை வகித்தவர். சமூக நீதிக்காக பாடுபட்டவர். தமிழக மக்களை காந்தக் குரலால் கட்டிப்போட்டு வைத்தவர் என்று கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை நிலை நாட்டப்பட்ட மாபெரும் வளாகம் இது. வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது.

விளிம்புநிலை மக்களின் நலன் காக்க இந்த சட்டப்பேரவை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. சட்டப்பேரவையின் வைரவிழா கருணாநிதி தலைமையில் கொண்டாடப்பட்டது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே மகளிருக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது என்றார். மேலும், கலைஞர் படத்தை குடியரசுத் தலைவர் திறந்ததை பார்த்து முதல்வராய் மகிழ்கிறேன், கலைஞரின் மகனாய் நெகிழ்கிறேன் என்று உருக்கமாக கூறி விடைபெற்றார்.

Related Stories: