×

இந்தியாவில் கொரோனா 3வது அலை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி அக்டோபரில் உச்சத்தை எட்டும்!: ஆய்வில் தகவல்

டெல்லி: இந்தியாவில் கொரோனா 3வது அலை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி, அக்டோபர் மாதம் கடுமையாக அதிகரிக்கக்கூடும் என ஆய்வுகள் வெளியாகியுள்ளன. ஹைதராபாத் ஐ.ஐ.டி.யை சேர்ந்த மாதகுமல்லி வித்யாசாகர் மற்றும் கான்பூர் ஐ.ஐ.டி.யை சேர்ந்த மகேந்திரா அகர்வால் ஆகியோரின் தலைமையில் கொரோனா 3வது அலை தொடர்பான ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த குழுவினர் 2வது அலையை மிகச் சரியாக முன்கூட்டியே கணித்து இருந்ததால் தற்போதைய ஆய்வுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இவர்களின் ஆய்வுப்படி இந்தியாவில் கொரோனா 3வது அலை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி, அக்டோபரில் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் அலையின் போது மே 7ம் தேதி வரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டது தான் இதுவரை உச்சகட்ட பாதிப்பாக இருந்தது. ஆனால் 3ம் அலை உச்சகட்ட பரவளின் போது நாள் ஒன்றிற்கு 1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை பாதிப்புகள் ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா 3ம் அலை 2ம் அலையின் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என எதிர்பாக்கப்படுகிறது. எனினும் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை அதிகரிப்பதும், கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதும் மிக அவசியமானது என்று ஆய்வு குழு அறிவுறுத்தியுள்ளது.

தொற்று அதிகம் பரவும் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதும், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் பாதிப்புகளை கட்டுப்படுத்த உதவும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 6 வயதிற்கு மேற்பட்ட இந்தியர்களில் மூன்றில் இருவருக்கு ஏற்கனவே ஏதோ ஒரு வகையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.


Tags : Corona ,India , India, Corona 3rd wave, study
× RELATED கொரோனா 3வது அலை எச்சரிக்கை!: திருப்பதி...