கொரோனா அதிகரிப்பு எதிரொலி: மதுரையில் மேலும் 22 கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு தடை..! ஆட்சியர் அறிவிப்பு

மதுரை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மதுரை மாவட்டத்தில் 22 கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மீனாட்சி அம்மன் கோவில் திருப்பரங்குன்றம், அழகர்கோவில், பழமுதிர் சோலையில் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் வண்டியூர் மாரியம்மன், பாண்டி முனீஸ்வரர் உட்பட 22 கோயில்களில் பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என மதுரை ஆட்சியர் அனீஸ் குமார் தெரிவித்துள்ளார். ஆடி கிருத்திகை, ஆடி பெருக்கு உள்ளிட்ட விஷேச தினங்களில் கோயில்களில் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் முன்கூட்டியே பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முகக் கவசம் அணியாத பொதுமக்களை வணிக நிறுவனங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். காய்கறி சந்தை, பழ சந்தை, மலர் அங்காடி உள்ளிட்டவற்றில் சில்லரை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>