சென்னை மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க முதல்வர் நடவடிக்கை: அமைச்சர் பெரியகருப்பன் உறுதி..!

வேளச்சேரி: சென்னை மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க முதல்வர் நடவடிக்கை மேற்கொள்வார் என்று அமைச்சர் பெரியகருப்பன் உறுதியளித்துள்ளார். சென்னை வேளச்சேரி அருகே பெரும்பாக்கம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க, ரூ.3.51 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினர். அப்போது அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், நூக்கம்பாளையம் அருகே மழைநீர் தேங்காத வகையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நீண்ட காலமாக பெரும்பாக்கம் ஊராட்சி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

தற்போதுள்ள பாலம் குறைவான உயரத்தில் இருப்பதால், மழைக்காலங்களின்போது சித்தாலப்பாக்கம், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம், நுாக்கம்பாளையம் பகுதி ஏரிகளின் உபரிநீர், இங்குள்ள குடியிருப்புகளில் தேங்கிவிடுகிறது. இவற்றை தடுத்து, இவ்வழியே வரும் மழைநீர் சதுப்பு நிலப்பகுதி வழியாக கடலில் கலக்கும் வகையில் இங்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இப்பாலம் எதிர்கால பயன்பாட்டை கருதி, 32 மீட்டர் நீளம், 16.6 மீட்டர் அகலம், 3.5 மீட்டர் உயரத்துக்கு அமையவிருக்கிறது. சென்னை மாநகராட்சிக்கு அருகே உள்ள ஊராட்சி பகுதிகளை இணைத்தால்தான், தங்களுக்கு அடிப்படை வசதி கிடைக்கும் என அப்பகுதி மக்கள் கருதி கோரிக்கை வைத்துள்ளனர். இது, தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் தக்க நேரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்றார்.

Related Stories: