40 ஆண்டாக நிர்வாகிகள் நியமிக்காததால் அண்ணா தொழிற்சங்கம் உடையும் அபாயம்: ஓபிஎஸ், இபிஎஸ் அதிருப்தி

தண்டையார்பேட்டை: 40ஆண்டாக தேர்தல் நடத்தாததால்  அண்ணா தொழிற்சங்கம் உடையும் அபாயத்தில் இருப்பதால் ஓபிஎஸ், இபிஎஸ் அதிருப்தியில் உள்ளனர். அதிமுகவில் அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளது. இதில் போக்குவரத்து பிரிவு உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்கள் அடங்கும். கடந்த 40 ஆண்டுகளாக அண்ணா தொழிற்சங்கத்துக்கு  தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளரின் பரிந்துரை பேரில் தொழிலாளர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போதுள்ள பேரவை செயலாளரின் செயல்பாடு சரியில்லை என்பதாலும், அவர் மீது கட்சியில் உள்ளவர்களுக்கு நம்பிக்கை இல்லாததாலும்  தேர்தல் நடத்தப்படவில்லை என பொறுப்பாளர்கள் கூறுகிறார்கள். அண்ணா தொழிற்சங்க பேரவையில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, தொழிற்சங்கங்கள்  செலுத்தும் சந்தாவுக்கு கழிவு தொகை கொடுப்பது வழக்கம். கழிவு தொகையை பேரவை நிர்வாகிகளுக்கு வழங்காமல் இருந்துள்ளார். அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் கழிவு தொகையை வழங்கும்படி ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர்  கூறியும் கோடிக்கணக்கான ரூபாயை யாருக்கும் கொடுக்காமல்  பேரவை செயலாளர் கையாடல் செய்துள்ளார். இது வெளியில் தெரியாமல் இருக்க தேர்தல் நாடகம் ஆடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர் பொறுப்பேற்று கடந்த 8 மாதங்களில் ஒருவருக்குக்கூட பொறுப்பு வழங்கப்படவில்லை. தங்களுக்கு பொறுப்பு கிடைக்காததால் பணம் கொடுத்தவர்கள் கட்சியிலும் பேரவையிலும் புகார் கொடுத்துள்ளனர்.  மேலும் தொழிற்சங்கத்தில் பணி மூப்பு காரணமாக ஓய்வுபெற்ற பின்பும் பலர் தொடர்ந்து பதவியில் நீடிப்பதாக உறுப்பினர்களும், நிர்வாகிகளும் புகார் கூறுகின்றனர்.  

ஏற்கெனவே, அண்ணா தொழிற்சங்க பேரவையில் செயலாளராக இருந்தவர்களில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.டி.கே.ஜக்கையன், ஆர்.சின்னசாமி மற்றும் தாடி மா.ராஜி போன்றவர்கள் பேரவை செயலாளர் பதவி கேட்டு ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள், மகளிர் அணியினர், மாவட்ட செயலாளர்கள் திமுகவில் தினமும் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். மற்றொருபுறம் சசிகலா அதிமுகவை கைப்பற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதனால் அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் கட்சி மாறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த வாரம் ஓபிஎஸ் வீட்டுக்கு சென்று பேரவை செயலாளர் மீது நிர்வாகிகள் புகார்  தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி என்ன முடிவு எடுப்பார்கள் என்பது தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே கேள்விக் குறியாகியுள்ளது.  40 ஆண்டாக தேர்தல் நடத்தாததால் அண்ணா தொழிற்சங்கம் உடையும் அபாயத்தில்  இருப்பதால், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் அதிருப்தியில்  இருந்து வருகின்றனர்.

Related Stories: