கர்நாடகா தர வேண்டிய தண்ணீரை விடுவிக்க உத்தரவிட வேண்டும்..! காவிரி மேலாண் ஆணையத்துக்கு டெல்டா விவசாயிகள் கோரிக்கை

தஞ்சை: குறுவைக்கு பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளதால் கர்நாடகா தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை விடுவிக்க காவிரி மேலாண் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரி நடுவர் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு காவிரியில் கர்நாடக அரசு மாதம்தோறும் தண்ணீர் திறந்து விட வேண்டும். அதன்படி தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்கு 9.19 டிஎம்சி, ஜூலை 31.24 டிஎம்சி, ஆகஸ்ட் 45.95 டிஎம்சி, செப்டம்பர் 36.76 டிஎம்சி, அக்டோபர் 20.22 டிஎம்சி, நவம்பர் 13.78 டிஎம்சி, டிசம்பர் 7.35 டிஎம்சி, ஜனவரி 2.76 டிஎம்சி, பிப்ரவரி 2.50 டிஎம்சி, மார்ச் 2.50 டிஎம்சி, ஏப்ரல் 2.50 டிஎம்சி, மே மாதத்துக்கு 2.50 டிஎம்சி என ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை காவிரியில் கர்நாடக அரசு திறந்து விட வேண்டும்.

அந்த அடிப்படையில் இந்தாண்டு ஜூன், ஜூலை மாதத்தில் 40.43 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த 31ம் தேதி வரை 30.09 டிஎம்சி தண்ணீரை தான் கர்நாடகம் திறந்துள்ளது. கர்நாடக அணைகள் நிரம்பும் நிலையிலும், பருவமழை நன்றாக பெய்து வரும் நிலையிலும் கூட தமிழகத்துக்குரிய தண்ணீரை முழுமையாக திறக்கவில்லை. இதனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசுக்கு விவசாய சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி நடராஜன் கூறியதாவது: காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி தமிழகத்துக்கு காவிரியில் ஜூன், ஜூலை மாதத்தில் 40.43 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும். ஆனால் வழக்கம்போல் உபரிநீரை தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்து விட்டு வருகிறது. தற்போது கர்நாடக அணைகள் கிட்டத்தட்ட நிரம்பி வழியும் நிலையை எட்டியுள்ளது. ஆனாலும் ஜூன், ஜூலை மாதத்திற்கு உரிய தண்ணீரை முழுமையாக வழங்க கர்நாடகா மறுத்து வருகிறது.

இதை கண்காணிக்க வேண்டிய ஆணையமும், நீர் ஒழுங்காற்று குழுவும் என்ன செய்து கொண்டுள்ளது என்பது தெரியவில்லை. இவற்றை செயல்படுத்த வேண்டிய ஒன்றிய அரசு வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் உள்ளது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முடியும் நிலையை எட்டியுள்ளது. சம்பா சாகுபடியும் துவங்கவுள்ளது. கர்நாடக அரசு, தண்ணீரை உரிய காலத்தில் திறந்து விட்டால் மட்டுமே காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர் பற்றாக்குறையின்றி விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியும். தற்போதைய சூழ்நிலையில் கர்நாடக அரசு, காவிரியில் தண்ணீர் திறந்து விடாவிட்டால் காவிரி டெல்டாவில் சாகுபடிக்கு நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கடந்த 2 மாதங்களில் கர்நாடகம் வழங்க வேண்டிய தண்ணீர் பாக்கி 9.34 டிஎம்சி தண்ணீரை உடன் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும் என்றார்.

Related Stories: