வாழ்க்கையை மாற்றிய கல்வி

நன்றி குங்குமம் தோழி

‘‘கல்விதான் ஒருவரின் தரத்தை உயர்த்தும். அதை நான் அனுபவத்தால் கற்றுக் கொண்டேன்’’ என்கிறார் சுனிதா ஷெர்லி. இவர் ‘ரூட்’ என்ற அமைப்பினை துவங்கி அதன் மூலம் சாலையோரம் வசிப்பவர்கள் மற்றும் வசதியற்ற மாணவர்களுக்கு கல்வியினை அளித்து வருகிறார். ‘‘அப்ப எனக்கு 18 வயசு இருக்கும். பள்ளிப் படிப்பை முடிச்சிட்டு கல்லூரியில் சேர்ந்தேன். எனக்கு படிக்க ஆசை, ஆனால் படிக்க வசதி இல்லை. எனக்கு உதவி செய்யவும் யாருமில்லை. என்னுடைய குடும்ப சூழலும் அப்படித்தான் இருந்தது. அந்த சமயத்தில் தான் என் தோழி மூலமா ஒரு தொண்டு நிறுவனத்தில் பகுதி நேர வேலைக்காக சேர்ந்தேன்.

கல்லூரிக்கு செல்லும் நேரம் தவிர்த்து தொண்டு நிறுவனத்தில் வேலைக்கு செல்வேன். அதில் கிடைச்ச வருமானத்தில் தான் நான் என் கல்லூரி படிப்பை முடிச்சேன்’’ என்றவர் உலகத்தில் தான் மட்டுமே அதிகம் கஷ்டப்படுவதாக நினைத்துள்ளார். ‘‘தொண்டு நிறுவனத்தில் வேலைப் பார்த்த போது தான் எனக்கு புரிந்தது, இந்த உலகத்தில் நான் மட்டுமே கஷ்டப்படல. என்னை விட மோசமான நிலையில் பலர் உள்ளனர் என்று தெரிந்து கொண்டேன். எனக்கு நல்லது கெட்டது சொல்லித் தர பெற்றோர்கள் மற்றும் தங்குவதற்கு வீடு உள்ளது.

ஆனால் இங்கு பலருக்கு பெற்றோர்கள் கிடையாது. அப்படியே இருந்தாலும் அவர்களுக்கென நிலையான வீடு என்று இல்லை. வீட்டில் ஏதோ ஒரு விஷயத்திற்காக சண்டைப் போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வேலைக்கு செல்ல முடியாமல், பிச்சை எடுத்துக் கொண்டு இருக்கும் இந்த குழந்தைகளை பற்றியும் இந்த தொண்டு நிறுவனம் மூலம் தெரிந்து கொண்டேன். இந்த குழந்தைகள் பஸ் நிலையத்தில் ஒன்றாக சேர்ந்து இருப்பாங்க. பஸ் வந்ததும் அதில் உள்ள பயணிகளிடம் பிச்சை கேட்பார்கள்’’ என்றவர் இவர்களிடம் பேசி அவர்களை குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துள்ளார்.

‘‘சில காலம் நான் அந்த தொண்டு நிறுவனம் மூலம் பெற்றோர் இருந்தும் பிச்சை எடுக்கும் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தேன். பெற்றோர்கள் இல்லாதவர்களை காப்பகத்தில் சேர்த்து அவர்களையும் பள்ளியில் சேர்த்து வந்தேன். இதற்கிடையில் எனக்கு திருமணமானது. கணவன், குழந்தைகள்ன்னு நான் குடும்பத்தில் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். என் மகளும் வளர்ந்தாள். அவளின் தேவைகளை அவள் தனக்குதானே பார்த்துக் கொண்டாள். என் குழந்தைகளை நான் ஒரு நிலைக்கு கொண்டு வந்துட்டேன்.

அதே போல் இந்த குழந்தைகளுக்கும் ஒரு நல்ல வழியை காண்பிக்க வேண்டும் என்று மனது துடித்தது. அதனால் நான் மறுபடியும் களத்தில் இறங்கினேன். மறுபடியும் சாலையோர குழந்தைகளை பார்க்க போனேன். குழந்தைகளும் தங்களின் பிரச்னைகளை என்னிடம் சொல்ல ஆரம்பிச்சாங்க. அவங்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய ஆரம்பிச்சேன். இந்த கட்டத்தில் குழந்தைகள் யாரும் சாலையில் படுக்கக்கூடாதுன்னு சட்டம் வந்தது. இவர்களின் வீடே சாலைகள் தான். அதற்கும் தடை வந்ததால் இது குறித்து நான் காவல் துறையினரிடம் பேசினேன். அவர்கள் தனி ஆளாக எதுவும் செய்ய முடியாது. ஒரு அமைப்பு மூலமாக இவர்களுக்கான உதவியை செயல்படுத்த முடியுமான்னு பாருங்கன்னு சொல்லிட்டாங்க.

அந்த வார்த்தை என்னை யோசிக்க வச்சது. நான் ஒரு தொண்டு நிறுவனத்தை நாடி செல்வதற்கு, நானே ஏன் அதை துவங்க கூடாதுன்னு தோணுச்சு. கணவரிடம் ஆலோசித்தேன். அவர் பச்சைக் கொடி காட்ட, 2005ல் ‘ரூட்’ என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை துவங்கினேன்’’ என்றவர் அதன் செயல்பாட்டினை பற்றி விவரித்தார். ‘‘முதலில் வீட்டை விட்டு ஓடி வந்து சாலையில் தங்கி இருந்த குழந்தைகளை காப்பகத்தில் சேர்த்தேன். அதன் பிறகு அவர்களுக்கு கல்வி அறிவு கொடுக்க திட்டமிட்டேன். படிப்பதற்கு தேவையான புத்தகம், பென்சில் எல்லாம் வாங்கி கொடுத்தேன். பள்ளியில் படிக்கும் மாணவர்களையே இவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க நியமித்தேன்.

இதன் மூலம் பலர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரி, டிப்ளமோ மற்றும் ஐ.டி போன்ற படிப்பு முடிச்சிட்டு வேலையில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். கல்வி ஒருவரின் தரத்தை மாற்றும் என்பதற்கு இந்த குழந்தைகளே உதாரணம். இவ்வளவு காலம் சாலையில் அழுக்கேறிய உடைகள் அணிந்து திரிந்தவர்கள், பள்ளியில் படிக்க ஆரம்பிச்சதும், தங்களுக்கு என வீடும், அழுக்கற்ற உடையினை உடுத்த வேண்டும் என்று தங்களை மாற்றிக் கொண்டனர். இதனால் பெற்றோர்களின் மனநிலையிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டது.

குழந்தைகளின் வளர்ச்சிக்காக பிச்சை எடுப்பதை விட்டுவிட்டு வேலை, வீடு என்று அமைத்துக் கொண்டனர். இது என் வாழ்க்கை. படிச்சா தான் எனக்கான வாழ்க்கையை நிர்ணயம் செய்ய முடியும்ன்னு கல்வி அவர்களுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது’’ என்றவர் ‘ரூட்’டினை 14 வருடமாக இயக்கி வருகிறார். ‘‘நான் முதன் முதலில் களத்தில் இறங்கிய போது, அண்ணா சாலையில் உள்ள குழந்தைகளை சந்திக்க சென்றேன். அவர்கள் நான் பணம் தரப்போறதா நினைச்சாங்க. அதற்கு பதில் கல்வி தரேன்னு சொன்னேன். சரின்னு சொன்னவங்க என்னிடம் போட்ட கண்டிஷன், பிச்சை எடுப்பதை விட மாட்டோம் என்பது தான். அந்த சமயத்தில் நான் இவர்களை கட்டாயப்படுத்தினா, படிக்கவும் வரமாட்டாங்க.

கல்வி அவர்களை மாற்றும் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை வீண் போகல. இவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது பல பிரச்னைகளை சந்தித்து இருக்கேன். அப்பல்லாம் என் குழந்தைகளான இவர்கள் தான் எனக்கு பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருந்தாங்க. வீட்டை விட்டு ஓடி வந்த குழந்தைகள் சிலரை அவர்கள் பெற்றோருடன் சேர்த்து இருக்கேன். பெற்றோர்களை கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் அவர்களை காப்பகத்தில் சேர்த்துவிடுவேன். சில குழந்தைகள் தகாத உறவு காரணமாக புகை மற்றும் போதைக்கு அடிமையாக இருந்தாங்க.

என்னால் மது விற்பனையை ஒழிக்க முடியாது. ஆனால் இவர்களிடமிருந்து அந்த பழக்கத்தை நீக்க முடியும். சிறப்பு கவுன்சிலிங் கொடுத்து மாற்றினேன். என்னதான் மாறினாலும் இவர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை. நல்லா படிச்சாலும் சாலையோரம் வாழ்பவர்கள் என்ற ஒரே காரணத்தால் திறமை

இருந்தும் வேலை கிடைப்பதில்லை. அதனால் என்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கை இவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவது’’ என்கிறார் சுனிதா ஷெர்லி.

தொகுப்பு: ப்ரியா

Related Stories: