பஞ்சாப் மாநிலத்தில் ஓர் ஆண்டிற்கு பிறகு அனைத்து பள்ளிகளும் திறப்பு!: ஆர்வமுடன் வருகை புரியும் மாணவர்கள்..!!

சண்டிகர்: பஞ்சாப்பில் ஒரு ஆண்டிற்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டிருக்கின்றன. கொரோனாவின் கோர தாண்டவம் எதிரொலியாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு பிறகு ரத்து செய்யப்பட்டன. கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியிருப்பதை அடுத்து மாநில அரசுகள் படிப்படியாக பள்ளிகளை திறந்து வருகின்றன. பஞ்சாப்பில் அனைத்து மாணவர்களுக்கான பள்ளிகள் இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. நீண்ட இடைவெளிக்கு பிறகு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை காண மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வருகை தந்திருந்தனர்.

மாணவர்களுக்காக பள்ளிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முகக்கவசம் அணிந்து வந்த மாணவர்களின் உடல்வெப்பம் அளவிடப்பட்ட பின்னர் வகுப்புகளில் அனுமதிக்கப்பட்டனர். வகுப்புகளில் மேஜைக்கு 2 பேர் மட்டுமே அமரவைக்கப்பட்டனர். பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தாலும் மாணவர்களுக்கு வருகை கட்டாயமாக்கப்படவில்லை. பள்ளிக்கு வராத மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து அங்குள்ள மாணவர் ஒருவர் தெரிவித்ததாவது, நீண்ட நாள் கழித்து பள்ளிக்கு வருவதே பெரும் மகிழ்ச்சியை தருகிறது. ஒரு வருடமாக வீட்டிலேயே இருந்ததால் கல்வி பாதிக்கப்பட்டது. ஆன்லைன் வகுப்பிலும் சரிவர புரியவில்லை என்று தான் கூற வேண்டும். தற்போது பள்ளிக்கு வந்து நண்பர்களையும், ஆசிரியர்களையும் பார்ப்பதால் மகிழ்சியாக இருக்கின்றேன் என்று குறிப்பிட்டார். சத்தீஸ்கர், ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் இன்று 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

Related Stories: