தமிழகத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக ஒப்பந்த நிறுவனங்கள் மீது 27 புகார்: விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய பொறியாளர்களுக்கு அதிகாரி உத்தரவு

சென்னை: தமிழக பொதுப்பணித்துறை மூலம் சுகாதாரத்துறை, வருவாய், வணிக, பதிவு, நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுக்காக புதிய கட்டிடங்கள் கட்டுவது மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. தற்காக, ஒவ்வெரு ஆண்டும் ரூ.3 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியை கொண்டு டெண்டர் விடப்பட்டு, தகுதியான ஒப்பந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகிறது. அந்த ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் கட்டுமான பணிகள் நடக்கிறது.

இவ்வாறு நடக்கும் பணிகளில் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் யாரிடம் புகார் அளிப்பது என்பது தெரியாமல் இருந்தது. அவ்வாறு புகார் அளித்தால் கூட அதிகாரிகள் சிலர் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் மறைத்து விடும் நிலை தான் இருந்தது. இதனால், பல நேரங்களில் தரக்குறைவான கட்டுமான பணிகள் நடைபெற்றன. இதனால், பல அரசு கட்டிடங்கள் கட்டிய சில நாட்களில் சேதமடைந்துள்ளது. இதை மறைப்பதற்காக பராமரிப்பு நிதியில் இருந்து எடுத்து தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொண்டுள்ளனர்.

இப்பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்க வசதியாக பொதுப்பணித்துறை மூலம் மாநிலம் முழுவதும் நடக்கும் கட்டுமான பணிகளில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக விசாரிக்க நோடல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நோடல் அதிகாரியிடம் பொதுமக்கள் புகார் அளிக்க பொதுப்பணித்துறையின் tnpwd.com என்கிற இணையதளம் வாயிலாக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில், புகார் அளிப்பவர் பெயர், அவரது மின்னஞ்சல், தொலை பேசி எண், புகார் குறித்த விவரங்களை தெரியப்படுத்தலாம்.

இந்த புகார்கள் மீது நோடல் அதிகாரி உரிய விசாரணை நடத்துவார். இந்த விசாரணையில் கட்டுமான பணியில் குறைபாடுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக புகார்தாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அறிவித்திருந்தது. அதன்பேரில், மாநிலம் முழுவதும் பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும் கட்டுமான பணிகளில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக ஒப்பந்த நிறுவனங்கள் மீது 27 புகார்கள் தற்போது வரை வந்துள்ளது. இந்த புகாரில் உள்ள உண்மை தன்மை தொடர்பாக நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பொறியாளர்களுக்கு நோடல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: