அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்டு மக்களுக்கும், பொருளாதாரத்துக்கும் பயன்தரும் வகையில் பட்ஜெட் தயாரிக்க வேண்டும்

* விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை

* அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: விவசாயிகள் மற்றும் துறை வல்லுநர்கள், பல்வேறு சங்கப் பிரதிநிதிகளை கலந்தாலோசித்து மக்களுக்கும், பொருளாதாரத்துக்கும் பயன்தரத் தக்க வகையில் இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையும், விவசாயத் துறைக்கான முதல் தனி நிதிநிலை அறிக்கையும் தயாரிக்க வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு அமைந்தது முதலே, திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதில், விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. அந்தவகையில், விரைவில் 2021-2022ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு தயாராகி வருகிறது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் தனியாக ஒரு நிதி நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது. விவசாயிகள் மற்றும் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல திட்டங்கள் இதில் அறிவிக்கப்பட உள்ளது. எனவே, மிகவும் எதிர்பார்ப்பு மிக்க நிதிநிலை அறிக்கையாக இது காணப்படுகிறது. இந்தநிலையில், சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள பொது நிதிநிலை அறிக்கை, வேளாண்மை மற்றும் விவசாயிகளுக்கான தனி நிதிநிலை அறிக்கையை, விவசாயிகள், விவசாய நிபுணர்கள் மற்றும் விவசாய சங்கங்கள் ஆகியோரை கலந்தாலோசித்து உரிய பயன்களைப் பெறும் வகையில் சிறந்த திட்டங்களை உள்ளடக்கி தயாரிக்க வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, தமிழ்நாடு அரசு இவ்வாண்டு இரண்டு நிதிநிலை அறிக்கைகளை சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளது. தமிழ்நாடு அரசு வரலாற்றில் முதன்முறையாக வழக்கமான நிதிநிலை அறிக்கையோடு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பாக தனியே ஒரு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை நிதிநிலை அறிக்கையினை விவசாயிகள், விவசாய நிபுணர்கள் மற்றும் விவசாய சங்கங்கள் ஆகியோரை கலந்தாலோசித்து விவசாயம் செழிக்கவும் விவசாயிகள் அவர்களது உழைப்பிற்கேற்ற உரிய பயன்களைப் பெறும் வகையில் சிறந்த திட்டங்களை உள்ளடக்கி தயாரிக்க வேண்டும்.

மேலும், பொது நிதிநிலை அறிக்கையினை பொருளாதார மற்றும் நிதிநிலை வல்லுநர்கள், பெருந்தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரை கலந்தாலோசித்து அவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையிலும் சிறந்த நிதிநிலை அறிக்கையினை அமைச்சர்களும், அரசு உயர் அலுவலர்களும் தயாரிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>