தொழிலாளர்களை தாக்கிய போதை ஆசாமிகள் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் ஜெ.என். சாலையில் புதியதாக அரசு மருத்துவமனைக்கான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு தங்கி கட்டிட பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் பழையனூர் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ்(35), நேற்று இரவு கனரக வாகனத்தில் சிமென்ட் கலவையை ஏற்றிக்கொண்டு மருத்துவமனை கட்டிட பணிக்காக சென்று கொண்டிருந்தார்.

அப்போது, 2 மோட்டார் சைக்கிள்களில் குடிபோதையில் அங்கு வந்த 6 பேர் அவரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றனர். அவர் வண்டியை நிறுத்தாமல் மருத்துவமனைக்கு பின்புறம் நிறுத்தி விட்டு இரவு பணியில் இருந்த மேற்பார்வையாளர் அஸ்வின்குமாரிடம் சம்பவத்தை கூறியுள்ளார்.

அப்போது அவருடன் பணி செய்யும் ஜெகதீஸ்வரன், தனசேகர், சரவணன், இதயமோகன் ஆகியோர் சென்று பார்த்தபோது அங்கிருந்த ஆகாஷ் உள்பட 8 பேர் இரும்பு ராடு மற்றும் பீர்பாட்டிலால் தொழிலாளர்களை தாக்கினர். இதில் ஈஸ்வரன்(29), ஆரோக்கியதாஸ்(35), சரவணன்(23), அஸ்வின்குமார்(21) ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் காந்திபுரத்தை சேர்ந்த ஆகாஷ்(19), அஜித்குமார்(21), சரவணக்குமார்(19), தினேஷ்(20), ஹரிஷ்(18), சந்தோஷ்(20), கமலக்கண்ணன்(17) ஆகிய 7 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பிரதாப் என்பவரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>