உபி சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு தயாராகுங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு அமித்ஷா அறிவுரை

லக்னோ: உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரி அல்லது மார்ச்சில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜ தீவிரமாக களமிறங்கி இருக்கிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உபி. பயணம் அதிகமாகி வருகிறது. சமீபத்தில் வாரணாசி சென்ற பிரதமர் மோடி, பல  ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்நிலையில், லக்னோவில் உள்ள சரோஜினி நகரில் ‘உத்தர பிரதேச மாநில தடய அறிவியல் நிலையம்’ அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில், அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது: உபி சட்டப்பேரவை தேர்தலில் பாஜ மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். இத்தேர்தலில் தங்களின் தோல்வியை சந்திக்க, எதிர்க்கட்சிகள் தயாராக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். உபி.யில் 44 நலத்திட்டங்களை அமல்படுத்தி, நாட்டின் நம்பர் 1 மாநிலமாக முதல்வர் யோகி ஆதித்யநாத் மாற்றி இருக்கிறார். தேர்தல் நெருங்குவதால் எதிர்க்கட்சித் தலைவர்கள் இப்போதுதான் வெளியே வர தொடங்கி உள்ளனர். அவர்கள் பரப்பும் தவறான தகவல்களை மக்கள் நம்பக் கூடாது,’’ என்றார்.

Related Stories: