தலிபான்கள் அட்டூழியம் கந்தகார் ஏர்போர்ட் மீது ஏவுகணை தாக்குதல்

காபூல்: கந்தகார் விமான நிலையத்தின் மீது ஏவுகணைகளை வீசி தலிபான்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு தலிபான்கள் அரசு படையுடன் சண்டையிட்டு ஒவ்வொரு பகுதிகளாக பிடித்து வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் 2வது பெரிய நகரமான கந்தகாரை தலிபான்கள் தற்போது குறிவைத்துள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு கந்தகார் விமான நிலையத்தின் மீது அவர்கள் 3 ஏவுகணைகள் வீசி தாக்கினர். இதில், 2 ஏவுகணைகள் விமான நிலைய ஓடு பாதையில் விழுந்து வெடித்தன. இதனால், ஓடு பாதை சேதமடைந்ததைத் தொடர்ந்து நேற்று விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

விமான நிலைய தலைவர் மசூத் புஸ்தன் அளித்த பேட்டியில், ‘‘ஓடு பாதையை சீர் செய்யும் பணி நடக்கிறது. இன்று (நேற்று) மாலைக்குள் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட வாய்ப்புள்ளது,’’ என்றார். தலிபான்களின் இத்தாக்குதலை ஆப்கான் அரசும் உறுதி செய்துள்ளது. சரக்குகளை கொண்டு செல்வதற்கும், வான்வழி போக்குவரத்துக்கும் தலிபான்களுக்கு கந்தகார் விமான நிலையம் முக்கிய தேவையாக இருக்கிறது. இதனால், அந்த விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: