தமிழக அரசின் வருவாயை பெருக்க பதிவுத்துறையில் ரூ.12 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட இலக்கு: உயரதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம், ஒவ்வொரு ஆண்டும் 25 லட்சம் ஆவணங்கள் வரை பதிவு செய்யப்படுகிறது. ஆனாலும் வருவாய் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் ஈட்ட முடியவில்லை. இதற்கு, வழிகாட்டி மதிப்பை காட்டி மதிப்பில் மோசடி செய்து பதிவு செய்வதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால், அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது. அதேபோன்று, கட்டிட களப்பணி நிலுவை, மதிப்பை குறைக்கக்கோரி நிலுவையில் உள்ள ஆவணங்கள் உட்பட பல்வேறு காரணங்களால் அரசுக்கு இழப்பு அதிகரிக்கிறது.  இதனால், கடந்த 2019-20ம் ஆண்டில் ரூ.13 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், வெறும் ரூ.11 ஆயிரம் கோடி தான் வருவாய் ஈட்ட முடிந்தது. 2020-2021ம் ஆண்டில் ரூ.10,460 கோடி மட்டுமே வருவாய் இலக்கை எட்ட முடிந்தது.

இந்த கால கட்டத்தில் வருவாய் இலக்கு ரூ.13 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த இலக்கை கடந்தாண்டிலும் அடைய முடியவில்லை. இந்த சூழ்நிலையில், நடப்பாண்டில் வருவாய் இலக்கை அடையும் வகையில், பதிவு செய்த அன்றே பத்திரங்கள் திருப்பி தரப்படுகிறதா, நிலுவையில் உள்ள ஆவணங்களை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, பத்திரப்பதிவின் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறதா என்பது குறித்து ஒவ்வொரு வாரமும் ஆய்வு செய்ய வேண்டும் என்று  மாவட்ட தணிக்கை பதிவாளர்களுக்கு அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், பத்திரப்பதிவுத்துறையில் நடப்பாண்டில் ரூ.12 ஆயிரம் கோடி வருவாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வருவாய் இலக்கை அடையும் வகையில் தேவையான நடவடிக்கை எடுக்க மாவட்ட தணிக்கை பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இப்பணிகளில் அலட்சியம் காட்டினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐஜி சிவன் அருள் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை தொடர்ந்து, நிலுவையில் உள்ள ஆவணங்கள் தொடர்பாகவும், வருவாய் இழப்புகள் ஏற்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்கும் பணியில் தணிக்கை மாவட்ட பதிவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தாண்டு வருவாய் இலக்கை காட்டிலும் கூடுதலான இலக்கு அடைய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: