தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிராக 66.2% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது

* விருதுநகர் 84%, சென்னை 82% அதிகரிப்பு

* ஈரோட்டில் 37% உயர்வு

* பொது சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில், 66.2 சதவீதம் பேருக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு திறன் உருவாகி உள்ளது என்று பொது சுகாதாரத்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது. தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தலைமையில், பொதுமக்களிடையே கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு திறன் எந்தளவிற்கு உயர்ந்துள்ளது என்பதை அறிய ஆய்வு நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, 2020ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட முதல்கட்ட ஆய்வில் 32 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு திறன் இருந்தது. அதன்பின், 2ம் கட்ட ஆய்வு 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட்டது. அதில், 29 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு திறன் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் மூன்றாம் கட்ட பரிசோதனை, கடந்த ஜூலை மாதத்தில் நடத்தப்பட்டது. அதில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம் என தமிழகம் முழுவதும் 888 பகுதிகளில் 26 ஆயிரத்து 610 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவர்களில் 17 ஆயிரத்து 624 பேர் என 66.2சதவீதம் பேருக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு திறன் உருவாகி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 84 சதவீதம் பேருக்கும், சென்னை மாவட்டத்தில் 82 பேருக்கும் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருப்பது தெரியவந்தது.

அதேசமயம், ஈரோடு மாவட்டத்தில் 37 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு திறன் மட்டுமே உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், விருதுநகரில் முதல் ஆய்வில் 40 சதவீதம், இரண்டாவது ஆய்வில் 22 சதவீதம் இருந்தது தற்போது 84 சதவீதமாகவும், சென்னையில் முதல் ஆய்வில் 41 சதவீதம், இரண்டாவது ஆய்வில் 49 சதவீதமாக இருந்து தற்போது நோய் எதிர்ப்பு சக்தி 82 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 1.60 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போட்டப்பட்டுள்ளது. மேலும் 25 லட்சம் பேருக்கு மேல் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

இதனால் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனையை விட மூன்றாம் கட்ட பரிசோதனையில் நோய் எதிர்ப்பு அதிகரித்துள்ளது என்று பொது சுகாதாரத்துறை இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ள பகுதிகளில் தடுப்பூசி செலுத்துவதில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் 78.2 %

ஐ.சி.எம்.ஆர் மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்திய ஆய்வில், சென்னையில் 78.2 % பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது.  சென்னையில் 4ம் கட்ட குருதி சார் ஆய்வை ஐ.சி.எம்.ஆர் மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்தியது. 51 வார்டுகளில் உள்ள 204 தெருக்களில் 12,434 பேருக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு தகுதி உடைய 7 ஆயிரத்து 26 பேரிடம் குருதி சார் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், மண்டலம் அடிப்படையில் குறைந்த பட்சமாக ஆலந்தூர் மண்டலத்தில் 74.1 சதவீதம் பேருக்கும், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 82.6 சதவீதம் பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.மாநகராட்சியில் தற்போது  நடத்திய ஆய்வில் 78.2 சதவீதம் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி  உருவாகியுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எதிர்ப்பு சக்தி உயர்வு

மாவட்டம்        எண்ணிக்கை

மதுரை        79

தென்காசி        78

தேனி        77

நெல்லை        76

ராமநாதபுரம்    75

திண்டுக்கல்    73

தூத்துக்குடி    72

கன்னியாகுமரி    72

ராணிப்பேட்டை    70

கடலூர்        70

கள்ளக்குறிச்சி    70

தி.மலை        68

வேலூர்        67

திருவள்ளூர்    67

திருச்சி        67

செங்கல்பட்டு    66

காஞ்சிபுரம்    65

விழுப்புரம்    65      

மயிலாடுதுறை    65

புதுக்கோட்டை    64

சிவகங்கை    63

திருவாரூர்        61

தஞ்சாவூர்        61

தருமபுரி        61

திருப்பத்தூர்    60

சேலம்        60

கிருஷ்ணகிரி    60

பெரம்பலூர்    58

அரியலூர்        56

நீலகிரி        55

கரூர்        51

நாமக்கல்        48

நாகப்பட்டிணம்    47

திருப்பூர்        46

கோவை        43

Related Stories:

>