×

ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது பதக்கம் வென்று பி.வி.சிந்து அபார சாதனை: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டியின் மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, ஒலிம்பிக்சில் 2 தனிநபர் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை வசப்படுத்தி உள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும்ஒலிம்பிக் போட்டித் தொடரின் மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்து (26 வயது) பதக்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கினார். சிறப்பாக விளையாடி அரை இறுதிக்கு முன்னேறிய அவர், அந்த போட்டியில் சீன தைபே வீராங்கனை டாய் ட்ஸூ யிங்கிடம் போராடி தோற்றதால் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

இதைத் தொடர்ந்து, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சீனாவின் ஹி பிங் ஜியாவோவுடன் நேற்று மோதினார். மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே களமிறங்கிய சிந்து, தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக புள்ளிகளைக் குவித்து முன்னேறினார். அவரது லாவகமான ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் சீன வீராங்கனை தடுமாற, முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் கைப்பற்றிய சிந்து முன்னிலை பெற்றார். அதே வேகத்துடன் 2வது செட்டிலும் அபாரமாக விளையாடிய அவர் 21-13, 21-15 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி வெண்கலப் பதக்கத்தை முத்தமிட்டார். நடப்பு ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 3வது பதக்கமாக இது அமைந்தது.

ஒலிம்பிக் போட்டியில் 2 தனிநபர் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் சிந்து நிகழ்த்தி உள்ளார். 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியின் பைனலில் அவர் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தலைவர்கள் வாழ்த்து: சாதனை வீராங்கனை சிந்துவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ள தகவலில் ‘சிந்துவின் சிறப்பான ஆட்டம் நம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்சில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துக்கள். சிந்து இந்தியாவின் பெருமை மட்டுமல்ல, நமது தலைசிறந்த ஒலிம்பியன்களில் ஒருவர்’ என்று பாராட்டி உள்ளார்.

Tags : PV ,Sindhu ,Olympics ,President ,PM , Olympic competition, second medal, PV Sindhu, tremendous achievement
× RELATED ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மின்டன்; 2வது சுற்றில் சிந்து