×

மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்திக்க விடாதீர்கள்..! எச்சரிக்கையாக இருப்போம், 3வது அலையை தடுப்போம்: முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: அலட்சியம் வேண்டாம்; எச்சரிக்கையாக இருப்போம், 3வது அலையை தடுப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவும் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா என்ற பெருந்தொற்று 18 மாதங்களாக நாட்டையும், நாட்டு மக்களையும் வாட்டி வதைத்துக் கொண்டியிருக்கிறது. மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, மருத்துவ கட்டமைப்பு, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தி உள்ளோம்.

ஆனால், அதற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கவில்லை. கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட நாடுகளில் கூட மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிரமம் இருந்தாலும், மக்களை பாதுகாப்பது அரசின் கையில் உள்ளது. தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். கொரோனாவால் அனைவரது வாழ்க்கையையும் முடக்கிப் போட்டிருக்கும் காலகட்டத்தில், இதிலிருந்து மீள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்புக்கொடுத்து விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

முழு ஊரடங்கு அமலில் இருக்கும் போது, கொரோனா கட்டுக்குள் வந்தது. தளர்வுகள் அளிக்கப்படும்போது, லேசாக பரவ தொடங்குகிறது. இதனை கவனத்தில் வைத்துக் கொண்டு மக்கள் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழக்தில் மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்திக்க விடாதீர்கள் என கடுமையாகவே சொல்கிறேன். கூட்டம் கூடுவதால் கொரோனா பரவலுக்கு மக்களே காரணமாகிவிட கூடாது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்க கூடாது என்பதற்ககாகவே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தரும் தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை, கிடைக்க கிடைக்க பயன்படுத்தி வருகிறோம்.

மூன்றாவது அலை மட்டும் அல்ல, எந்த அலை வந்தாலும் அதனை வெல்லும் ஆளுமை தமிழக அரசுக்கு உள்ளது. அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும் தயார் நிலையில் இருக்கிறது. அதற்காக கொரோனாவை விலைகொடுத்து வாங்கி விட கூடாது என பொதுமக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி யே சிறந்த ஆயுதம். முதல் மற்றும் இரண்டாவது அலையை விட மூன்றாவது அலை மோசமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, கொரோனா பரவலில் அலட்சியம் வேண்டாம், எச்சரிக்கையாக இருப்போம், கொரோனா மூன்றாவது அலையை தடுப்போம் என்றும் அவரச தேவை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வாருங்கள் எனவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீடியோ காட்சி மூலம் பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Tags : Stalin , Do not force the government to a complete curfew again ..! Let's be careful, let's stop the 3rd wave: Chief Stalin's instruction
× RELATED சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி...