×

பள்ளிகள் திறப்பு தாமதம் ஆவதால் பாடத் திட்டங்கள் குறைப்பு குறித்து ஆலோசனை: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை: பள்ளிகள் திறப்பு தாமதம் ஆவதால், பாடத் திட்டங்கள் குறைப்பு குறித்து ஆலோசனை நடந்து வருவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். எழுதுக இயக்கம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் எழுதிய 100புத்தகங்கள் வெளியிடும் நிகழ்ச்சிசென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புத்தகங்களை வெளியிட்டார். இதில் பிரம்மோஸ் விண்வௌி மைய நிறுவனர் ஏ.சிவதாணு பிள்ளை, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பேரன் ஷேக் தாவூத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது: தமிழகத்தில் பள்ளிகள் திறப்புகுறித்து துறைரீதியான ஆலோசனை நடந்து வருகிறது. இதில் மருத்துவ வல்லுநர்களின் கருத்துகளையும் அறிய வேண்டியது அவசியம். தற்போது 3 மாநிலங்களில் பிளஸ் 2 வகுப்புக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல, தமிழகத்திலும் பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பு தாமதம் ஆவதால், பாடத் திட்டத்தை குறைப்பதுகுறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும். பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாத 23 மாணவர்கள் மட்டும் துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இதுதவிர, தனித் தேர்வர்கள் 39,579 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. கரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பாதுகாப்பான முறையில் துணைத் தேர்வுகள் நடத்தப்படும். இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளை நோக்கி வந்துள்ள மாணவர்களை தக்கவைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் வசூலிப்பது தொடர்பாகஉயர் நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவற்றை முறையாக பின்பற்றி செயல்படுமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கல்விக் கட்டண விவகாரத்தில், தனியார் பள்ளிகளை தண்டிப்பதைவிட அறிவுறுத் தவே விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister Love Mahesh , Advice on reduction of syllabi due to delay in opening of schools: Interview with Minister Anbil Mahesh
× RELATED தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு...