பிரபலங்களின் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்: ‘பெகாசஸ்’ மனுக்கள் 5ம் தேதி விசாரணை..! சுப்ரீம் கோர்ட் வட்டாரங்கள் தகவல்

புதுடெல்லி: பெகாசஸ் தொடர்பான மனுக்கள் வரும் 5ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.  இஸ்ரேலின் ‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

அதிக பொருட்செலவில் தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கை போன்றவற்றிற்காகப்  பயன்படுத்தப்படும் மென்பொருளை அரசியல் கட்சித் தலைவர்கள், நீதிபதிகள்,  பத்திரிகையாளர்கள், பிரபலங்களின் தொலைபேசி தகவல்களைச் சேகரிப்பது, ஒட்டுக்  கேட்பது எனப் பயன்படுத்தியது யார் என அறிவிக்கக் கோரி மக்களவை,  மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்பி ஜான் பிரிட்டாஸ் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கெனவே இதேபோன்ற கோரிக்கையை முன்வைத்து பிரபல பத்திரிகையாளர், வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதுவரை, இவ்விவகாரம் தொடர்பாக 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பெகாசஸ் விசயத்தில் தேசப் பாதுகாப்பு, தனி மனித அந்தரங்கத் தகவல் ஆகியவை அடங்கியுள்ளதால் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக் குழு அமைக்க வேண்டும் எனவும் மனுக்களில் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனையடுத்து, இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா, பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பான அனைத்து மனுக்களையும் அடுத்த வாரம் (ஆகஸ்ட் முதல் வாரம்) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக ஒப்புதல் தெரிவித்தார். அதன்படி, இம்மனுக்கள் பட்டியலிடப்பட்டுள்ளதால், வரும் 5ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: