தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை: பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்..!

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுபடுத்த கடந்த ஏப்ரல் 19ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கோயில்களில் அர்ச்சகர்கள் மூலம் பூஜை நடத்த மட்டும் அனுமதிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்ததை அடுத்து, கோயில்களை திறக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதையேற்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கோயில்கள் கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டன. தொடர்ந்து, ஜூலை 5ம் தேதிக்கு பிறகு மற்ற மாவட்டங்களில் உள்ள கோயில்களில் பல்வேறு கட்டுபாடுகள் உடன் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டன. தற்போது ஆடிமாதம் என்பதால் அம்மன் கோயில்களில் திருவிழா களைக்கட்டுவது வழக்கம். குறிப்பாக, அம்மன் கோயில்களில் ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது, பக்தர்கள் நேர்த்திக் கடனாக தீமீதித்தும், காவடி சுமந்தும், பொங்கல் மற்றும் மாவிளக்கு படையலிட்டும் வருகின்றனர்.

அதே போன்று தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆடி கிருத்திகை விழா நேற்று முதல் முருகன் கோயில்களில் களைகட்ட தொடங்கியுள்ளது. ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. இதை காண கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனால், கொரோனா தொற்று பரவ வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த  சூழ்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து  வருகிறது. இதனால், பரவலை கட்டுபடுத்தும் வகையில் அதிகம் கூட்டம் கூடும்  பகுதிகளை மூட நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

 அதன்படி, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவின் பேரில் தமிழகத்தில் பழனி தண்டாயுதபாணி சுவாமி, திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி, திருத்தணி முருகன் கோயில், சுவாமிமலை மற்றும் பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில், சென்னையில் வடபழனி முருகன் கோயில், கந்தக்கோட்டம் கந்தசாமி கோயில், காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை, குமரகோட்டம், இளையனார், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள், தஞ்சை பெரிய கோயில், மயிலம் சுப்பிரமணியசுவாமி கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், நெல்லையப்பர் கோயில், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில், பாபநாசம் பாபநாசசுவாமி கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்கள் மற்றும் பல்வேறு முருகன் கோயில்களில் இன்று முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரையும்,  சென்னையில் பாடி படவேட்டம்மன் கோயில், தேவி பாலியம்மன் கோயில், விழுப்புரம் மேல்மலையனூர் அம்மன் கோயில், புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில், உரையூர் வெக்காளியம்மன் கோயில் மேட்டுபாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில், மாசாணியம்மன் கோயில், பேரூர் பட்டீஸ்வரர் கோயில், திருவண்ணாமலை படவேடு ரேணுகாம்பாள் கோயில், உட்பட பல்வேறு அம்மன் கோயில்களில் ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கோயில்களில் அர்ச்சகர்கள் மூலம் தினசரி பூஜைகள் நடைபெறும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் இன்று முருகன், அம்மன் கோயில்கள் உள்ளிட்ட அனைத்து கோயில்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. இது தொடர்பாக கோயிலின் நுழைவு வாயில்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனால், கோயிலுக்கு வந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகளும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதே நேரத்தில் வழக்கம் போல் கோயில்களில் அர்ச்சகர்கள் மூலம்  பூஜைகள் நடந்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் 8ம் தேதி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் அன்றைய தினமும், கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: