×

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு இந்தாண்டு 2 நிதிநிலை அறிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு இந்தாண்டு 2 நிதிநிலை அறிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, தமிழ்நாடு அரசு இவ்வாண்டு இரண்டு நிதிநிலை அறிக்கைகளை சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளது. தமிழ்நாடு அரசு வரலாற்றில் முதன்முறையாக வழக்கமான நிதிநிலை அறிக்கையோடு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை சார்பாக தனியே ஒரு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை நிதிநிலை அறிக்கையினை விவசாயிகள், விவசாய நிபுணர்கள் மற்றும் விவசாய சங்கங்கள் ஆகியோரை கலந்தாலோசித்து விவசாயம் செழிக்கவும் விவசாயிகள் அவர்களது உழைப்பிற்கேற்ற உரிய பயன்களைப் பெறும் வகையில் சிறந்த திட்டங்களை உள்ளடக்கி தயாரிக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களையும் அரசு உயர் அலுவலர்களையும் அறிவுறுத்தினார். மேலும், பொது நிதிநிலை அறிக்கையினை பொருளாதார மற்றும் நிதிநிலை வல்லுநர்கள், பெருந் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், தொழிலதிபர்கள்,

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரை கலந்தாலோசித்து அவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையிலும் சிறந்த நிதிநிலை அறிக்கையினை தயாரிக்க மாண்புமிகு அமைச்சர் பெருமக்களையும் அரசு உயர் அலுவலர்களையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.


Tags : Chief Minister ,MK Stalin , In order to fulfill the election promise, 2 financial statements will be tabled in the Assembly this year: Chief Minister MK Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...