நாடு முழுவதும் 46 மாவட்டங்களில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா: கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: இந்தியாவில் 46 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் அங்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டையே நிலைகுலைய வைத்த கொரோனா 2-வது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 41,831 பேருக்கு தொற்று உறுதியானது. கடந்த 3 வாரங்களில் அதிகபட்ச தொற்றாக இது கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையிலான உயர்நிலை ஆய்வு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

அதில் பங்கேற்ற இந்திய மருத்துவ ஆய்வு மைய இயக்குனர் பல்ராம் பார்கவா, நாட்டில் உள்ள 46 மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதையும் எஞ்சிய 53 மாவட்டங்களில் கட்டுக்குள் இருப்பது குறித்தும் விரிவாக விளக்கினார். இதையடுத்து அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களை கண்காணிக்கவும், அதிக கூட்டம் மூலம் தொற்று வேகமாக பரவாமல் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரக மருத்துவ உள்கட்டமைப்பை உறுதி செய்வதுடன், கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்கி வைரஸ் பரவலைத் தடுக்கவும் மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

இதனிடையே உத்திரப்பிரதேச மாநிலத்தில் வார இறுதி ஊரடங்கு அமலில் இருந்த போதிலும், கான்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வைரஸ் தொற்று குறித்த எந்தக் கவலையுமின்றி மக்கள் அலட்சியமாக நடமாடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை 49.49 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு இறுதிக்குள் 96 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு விடும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: