முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம் தேசிய மருத்துவ ஆணைய அறிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு: ஒன்றிய சுகாதார அமைச்சருக்கு அவசர கடிதம்

சென்னை: முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் தேசிய மருத்துவ ஆணைய வரைவு அறிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். முதுநிலை மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், மாநில அரசுகளுக்கான 50% இடஒதுக்கீடு இடங்களையும் ஒன்றிய அரசு நிரப்பும் என தேசிய மருத்துவ ஆணையம் வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது, மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் செயல் என பல்வேறு மருத்துவ சங்கங்கள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த வரைவு அறிக்கைக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு நேற்று அவசர கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். உங்கள் கவனத்திற்கும் கொண்டு வருகிறேன். இந்த வரைவு அறிக்கையின் நோக்கமே, முதுநிலை மாணவர் சேர்க்கையில் மாநில அரசின் அதிகாரத்தை பறிப்பதே. மாநில அரசின் தற்போதைய முக்கிய பங்கு பற்றி சரியான புரிதல் இல்லாமல் இந்த வரைவு அறிக்கை வகுக்கப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. பெரும்பாலான முதுநிலை இடங்களை உருவாக்க தங்கள் சொந்த வளங்களை மாநில அரசு பயன்படுத்தி உள்ளதை ஒன்றிய அரசும் தேசிய மருத்துவக் கவுன்சிலும்  பாராட்ட வேண்டும். இதனால்தான் தாங்கள் தொடர்ந்து மாநில உரிமைகளை பறிக்கும்போது எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

வரைவு அறிக்கையில் 11.2ல், மாநில அரசு ஒதுக்கீட்டிற்கும் ஒன்றிய அரசே ஒரே மாதிரியான கவுன்சலிங் நடத்தும் என்ற அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. இது, விதிமீறலும் ஆகும். இது, தேசிய மருத்துவ ஆணையம் சட்டம், 2019, மெயின் பிரிவு 15ல் உள்ள விதிமுறைகளுக்கு முரணானது. இது மாநிலத்தின் நியமிக்கப்பட்ட அதிகாரம் என்று வெளிப்படையாக குறிப்பிடுகிறது. மாநில அளவில் உள்ள இடங்களுக்கான கவுன்சலிங்கை மாநில அரசே நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், முன்மொழியப்பட்ட வரைவு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளபடி, முதுநிலை படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

எனவே, வரைவு விதிமுறைகள் எங்கள் மாநில அரசின் கொள்கைக்கு முற்றிலும் மாறானவை உள்ளது. எங்கள் மாநிலத்தில் முதுநிலை படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மாநில அரசு ஒதுக்கீட்டில் தங்கள் மாநிலத்திற்குட்பட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வெளிப்படையாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. மருத்துவத்தை ஊக்குவிக்கும் ஒரு வலுவான வழிமுறையும் எங்களிடம் உள்ளது. எங்கள் பொது சுகாதாரத்துறை நன்கு செயல்படும் அடித்தளமாக முதுநிலை மாணவர்களுக்கு கிராமப்புறங்கள், மலை கிராமங்கள் மற்றும் மிகவும் கடுமையாக பகுதிகளில் மருத்து சேவையாற்றுகின்றனர். இந்த வரைவு அறிக்கை செயல்படுத்தப்பட்டால், தங்களது மாநிலத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். எனவே, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ள இந்த வரைவு அறிக்கை கடுமையாக எதிர்க்கிறேன். எனவே, ஒன்றிய அரசின் இந்த முடிவை கைவிட்டு, மாநில ஒதுக்கீட்டில் உள்ள 50% இடங்களுக்கு மாநில அரசே கவுன்சலிங் நடத்தும் முறை தொடர வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>