சென்னை-பெங்களூரு 6 வழிச்சாலை பணிக்காக அரசு நிலத்துக்கு ரூ.126 கோடி இழப்பீடு பெற்ற 83 பேரின் போலி பட்டா ரத்து: வருவாய்த்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: சென்னை-பெங்களூரு 6 வழிச்சாலைப் பணிக்காக அரசு நிலத்துக்கு ரூ.126 கோடி இழப்பீடு பெற்ற 83 பேரின் போலி பட்டாவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை-பெங்களூரு இடையே  6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கு நிலத்தை கையகப்படுத்தும் பணிக்காக, இழப்பீட்டு தொகை கடந்த 2018ல் ரூ.126 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே பீமன் தாங்கல் கிராமத்தில் 9 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் போலியாக பட்டா  மாற்றம் செய்து இழப்பீடு பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நடந்த விசாரணையில் போலி பட்டா தயார் செய்து இழப்பீடு தொகை பெறப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதன்பேரில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ரூ.30 கோடி பெற்ற ஆசிஷ் மேத்ரா, ரூ.3 கோடி பெற்ற செல்வம் ஆகியோரை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இது தொடர்பாக 46 கிராமங்களில் போலி பட்டா தயார் செய்து இழப்பீடு பெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து 83 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ரூ.126 கோடி வசூலிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 83 பேரின் போலி பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கடந்த 2000ம் ஆண்டு முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டத்துக்குட்பட்ட 46 கிராமங்களில் போலி பட்டா தயார் செய்து புறம்போக்கு நிலங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றனர் என்று நில நிர்வாக ஆணையருக்கு கடந்த 2007ல் புகார் வந்தது. இந்த மோசடி வேலையில் திருவண்ணாமலை உதவி செட்டில்மென்ட் அதிகாரி தான் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக, நில நிர்வாக ஆணையர், நிலங்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.  

ஆனால், அப்போது இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில், 2018ல் அந்த நிலங்களில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நடவடிக்கை எடுத்து இருக்கும் பட்சத்தில் இந்த பிரச்னை ஏற்பட்டு இருக்காது. 2021ம் ஆண்டில் போலி பட்டா என கண்டறியப்பட்டதால், இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது புறம்போக்கு நிலங்கள் பட்டா மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரையின் பேரில், பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories:

>