இணையத்தில் கோயில்களுக்கு கட்டிடங்களில் வசிப்பவர் விவரம் வெளியீடு வாடகைதாரர்கள் ஆதார், போட்டோ வழங்க உத்தரவு: அறநிலையத்துறை நடவடிக்கை

சென்னை: கோயில்களுக்கு சொந்தமான கட்டிடங்களில் இருக்கும் வாடகைதாரர்கள் விவரங்களை இணையதளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளது. இது தொடர்பான விவரங்களை ஆக. 3ம் தேதிக்குள் வழங்க வாடகைதாரர்களுக்கு அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தும் வகையில் அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார். அதன்பேரில், கோயில் கட்டிடங்கள், நிலங்களில் வாடகைதாரர்களின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளது.

கோயில்களுக்கு சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளது. இதில், 1.48 லட்சம் ஏக்கர் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அதேபோன்று 90 ஆயிரம் கட்டிடங்கள் வரை வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்கள், நிலங்களின் வாடகைதாரர்கள் சிலர் உள்வாடகைக்கு விட்டிருப்பதாக தெரிகிறது. இதில், கடந்த காலங்களில் 50, 90 ஆண்டுகள் வரை குத்தகைக்கு எடுத்தவர்களில் பெரும்பாலான ஒரிஜினல் வாடகைதாரர்கள் இல்லை என்று கூறப்படுகிறது.  

இந்தநிலையில், அறநிலையத்துறை கட்டிடங்களில் யார், யார் வாடகைதாரர்களாக உள்ளனர் என்ற தகவலை இணையதளத்தில் வெளியிட அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் முடிவு செய்துள்ளார். எனவே, இது தொடர்பாக விவரங்களை பெற மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் வாடகைதாரர்களுக்கு அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கோயிலுக்கு சொந்தமான சொத்தின் அசல் வாடகைதாரர்கள் அல்லது தற்போது உள்ளவர்களின் விவரத்தை இணையதளத்தில் பதிவு செய்ய இருப்பதால், தங்களது ஆதார் கார்டு, புகைப்படம், கைப்பேசி, மின்னஞ்சல் முகவரியுடன் கோயில் அலுவலகத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் நேரில் வந்து வழங்க கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>