அதிமுக ஆட்சியின்போது நில அபகரிப்பு குற்றவாளிக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு: அதிர்ச்சியில் அதிகாரிகள்

சென்னை: அதிமுக ஆட்சியின்போது நில அபகரிப்பு குற்றவாளிக்கு அப்போதைய சிபிசிஐடி டிஜிபி உத்தரவின்பேரில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக ஆட்சியில், ஆளும் அரசியல்வாதிகள் மட்டுமின்றி பதவியில் இருந்த உயர் அதிகாரிகளும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக, அரசியல்வாதிகளின் தவறுகளை, அதிகாரிகள் மூடி மறைத்து வந்தனர். இருவரும் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததால் நிர்வாகம் முழுமையாக சீட்கெட்டு போய் விட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.

அதன் ஒரு கட்டமாகத்தான் கடந்த அதிமுக ஆட்சியின்போது அரசியல்வாதிகள், முன்னாள் போலீஸ் அதிகாரிகள், மாஜி ஐஏஎஸ் அதிகாரிகள், ஆளும் கட்சிக்கு வேண்டியவர்கள், தங்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள், போலீசுக்கு உளவு சொல்பவர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு புரோக்கராக இருப்பவர்கள் ஏன் குற்றவாளிகளுக்கு கூட போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இவ்வாறு மாநிலம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் இதுபோன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

வழக்கமாக சிலருக்கு நீதிமன்றம் அல்லது உளவுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில்தான் பாதுகாப்பு வழங்கப்படும். அப்படி வழங்கினாலும், காவலர்களின் சம்பளத்தை அவர்கள் அரசுக்கு கட்டணமாக கட்ட வேண்டும். ஆனால் கடந்த ஆட்சியின்போது பலருக்கும் அவ்வாறு கட்டணம் வசூலிக்காமல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த ஒரு சிலர் மற்றும் எம்எல்ஏக்களாக இருந்தவர்களுக்கு தற்போதும் அதே பாதுகாப்பு தொடருவதாக கூறப்படுகிறது. இதன் உச்சக்கட்டமாக குற்றவாளிகள் பலருக்கும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் ஆதரவுடன் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதில் சென்னை திரிசூலம் பகுதியில் உள்ள திரிசூலநாதர் கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புகார் எழுந்ததால் அப்போது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நில ஆக்கிரமிப்பு செய்த குயின்டன் தாசன் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து, போலி ஆவணம் மூலம் விற்பனை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது.

ஜாமீனில் வெளியில் வந்த பிறகு, சிபிசிஐடியில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுடன் அவர் நெருக்கமானதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அப்போதைய சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி.பிலிப், சென்னை போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தைத் தொடர்ந்து குயின்டன்தாசுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், நில அபகரிப்பு குற்றவாளியான குயின்டன்தாசிடம் புகார் வாங்கித்தான் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் வழக்கில் முகாந்திரம் இல்லை என்றும் நீதிமன்றம் பல முறை கூறியது. ஆனாலும், ஒரு குற்றவாளியிடம் புகாரை வாங்கி ஜெகத்ரட்சகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிபிசிஐடி போலீசாருடன் குயின்டன்தாஸ் நெருக்கமாக இருந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்தநிலையில்தான் டிஜிபி பிரதீப் வி.பிலிப் பரிந்துரையின்பேரில் குயின்டன் தாசுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேபோல, அதிமுக ஆதரவு நிலை எடுத்த பல குற்றவாளிகளுக்கும், வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கும் தற்போதும் பாதுகாப்பு தொடருவதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை திரும்ப பெற வேண்டும். போலீசாரை பொதுமக்கள் பாதுகாப்புக்கு உயர் அதிகாரிகள் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: