2 ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் சர்வேயர்கள் பணியாற்றக்கூடாது என்ற உத்தரவு ரத்து: அப்பீல் மனுவை ஏற்றது ஐகோர்ட் கிளை

மதுரை: சர்வேயர்கள் ஒரே இடத்தில் 2 ஆண்டுக்கு மேல் பணியாற்றக் கூடாது என்ற நில அளவை கமிஷனரின் உத்தரவை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. மதுரையைச் சேர்ந்த ஆசைத்தம்பி, தனது சொத்து மீதான நில அளவீடு தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன இயந்திரங்கள் மூலம் நில அளவீடு செய்ய வேண்டும். பணம் செலுத்திய 30 நாட்களில் நில அளவீடு செய்ய வேண்டும். தவறினால் கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும். தாமதத்திற்கு சம்பந்தப்பட்டவரின் சம்பளத்தில் ரூ.2500 பிடித்தம், ஒழுங்கு நடவடிக்கையுடன், சஸ்பெண்ட் செய்ய வேண்டும். சர்வேயர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றவில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்றறிக்கையை ஒரு மாதத்தில் பிறப்பிக்க வேண்டுமென கடந்தாண்டு உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு நில அளவையர் யூனியன் பொதுச்செயலாளர் ராஜா தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், நில அளவை தொடர்பான ரிட் மனுவின் மீது உரிய நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக பொது நல மனுவைப் போல தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மற்ற அரசுத் துறைகளில் குறைந்தது 3 ஆண்டுகள் என இருக்கும்போது, சர்வேயர்களுக்கு மட்டும் 2 ஆண்டு என்பது ஏற்புடையதல்ல. எனவே, தனி நீதிபதியின் உத்தரவையும், இதன் அடிப்படையிலான நில அளவை கமிஷனரின் உத்தரவையும் ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டனர். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சர்வேயர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் 2 ஆண்டுக்கு மேல் பணியாற்றக் கூடாது என்ற உத்தரவையும், இதன் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட நில அளவை கமிஷனரின் உத்தரவையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: