மதுவிலக்கு அமல்படுத்துவது அரசின் கொள்கை முடிவு: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை:  தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டியதில்லை என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. விருதுநகரை சேர்ந்த காந்திராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2019ல் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அதிமுக சார்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. தேர்தல் அறிக்கையின்படி, 2020க்குள் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைத்து மதுவிலக்கு அமலாகும் என கூறப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

டாஸ்மாக்கை மூடுவதன் மூலம் ஏற்படும் இழப்பை, சொத்துக்களின் வழிகாட்டுதல் மதிப்பை முறைப்படுத்துவதன் மூலம், மணல், கிரானைட் உள்ளிட்ட கனிமவள விற்பனை மற்றும் அனுமதியை முறைப்படுத்துவதன் மூலமும் ஈடுகட்ட முடியும். ஆனால், டாஸ்மாக்கை மட்டுமே வருமானமாக பார்ப்பதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. டாஸ்மாக் விற்பனையால் அதிக இளைஞர்கள் மது பழக்கத்திற்கு ஆளாகின்றனர். விபத்துகள், தற்கொலைகள் அதிகரித்துள்ளன. எனவே, தேர்தல் வாக்குறுதிப்படி எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன என்பது குறித்தும், தமிழகத்தில் முழுமையாக மதுவிலக்கை அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை தற்போது விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி எஸ்.ஆனந்தி ஆகியோர், மனுதாரர் கோருவது அரசின் கொள்கை முடிவோடு தொடர்புடையது. இதில், எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டியதில்லை.  எனவே, இந்த மனு முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories:

>