ஒன்றிய அரசு அறிவுறுத்தல் 10%க்கு மேல் பாதிப்பு உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடு: தவற விட்டால் நிலைமை மோசமாகும்

புதுடெல்லி: ‘தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களில், கொரோனா பாசிடிவ் விகிதம் 10 சதவீதத்திற்கு மேல் உள்ள மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மாநில, அரசுகள் பரிசீலிக்க வேண்டும். முக்கியமான இந்த தருணத்தை தவற விட்டால், நிலைமை மோசமாகி விடும்,’ என ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. கொரோனா தினசரி தொற்று கடந்த சில நாட்களாக மீண்டும் சற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக, கேரளாவில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. தற்போது கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா, அசாம், மிசோரம், மேகாலயா, ஆந்திரா, மணிப்பூர் ஆகிய 10 மாநிலங்களில் தினசரி தொற்று விகிதம் அதிகரிப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இந்த 10 மாநிலங்களில் கொரோனா நிலவரம் தொடர்பாக மறுஆய்வு செய்யும் உயர்மட்ட கூட்டம் ஒன்றிய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூசன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கடந்த சில வாரங்களில் கொரோனா பாசிடிவ் விகிதம் 10 சதவீதத்திற்கு மேல் பதிவான மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுவது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும். மக்கள் நடமாட்டம், கூட்டம் கூடுதல், தொற்று பரவல் தடுக்கப்பட வேண்டும். 10 மாநிலங்களில் தினசரி தொற்று விகிதம் அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். அவர்கள் வெளியில் செல்லாத வகையிலும், வேறு யாரும் பாதித்த நபர்களை சந்திக்காத வகையிலும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட வேண்டும். இது முக்கியமான காலகட்டம். இதில் சுணக்கமாக இருந்தால், 10 சதவீதத்துக்கு மேல் பாசிடிவ் விகிதம் உள்ள மாவட்டங்களில் நிலைமை மிகவும் மோசமாகிவிடும்,’ என எச்சரிக்கப்பட்டுள்ளது.

* பஞ்சாப்பில் அனைத்து பள்ளிகளும் திறப்பு

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்திருப்பதைத் தொடர்ந்து, அங்கு அனைத்து வகுப்புகளுக்கும் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் அங்கு 10, 12ம் வகுப்புகள் தொடங்கப்பட்டன. பள்ளிகளில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக கடைபிடிக்கப்படும் என மாநில அரசு கூறி உள்ளது.

41,649 பேருக்கு தொற்று

* நாடு முழுவதும் நேற்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 41,169 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 3 கோடியே 16 லட்சத்து 13 ஆயிரத்து 993.

* கடந்த 24 மணி நேரத்தில் 593 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 23 ஆயிரத்து 810.

* தினசரி பாதிப்பு அதிகமுள்ள 10 மாநிலங்களில் 46 மாவட்டங்களில் கொரோனா பாசிடிவ் விகிதம் 10 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

* மேலும் 53 மாவட்டங்களில் பாசிடிவ் விகிதம் 5 முதல் 10 சதவீதம் வரையிலும் உள்ளது என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>