ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடல் போலீஸ் மீதான தவறான எண்ணத்தை மாற்றுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, போலீஸ் மீதான மக்களின் தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் கலந்து கொண்டனர்.

இதில் பிரதமர் மோடி பேசியதாவது: ஐபிஎஸ் பயிற்சி பெறும் நீங்கள் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற கொள்கையை முன்னெடுத்து செல்பவர்களாக இருக்க வேண்டும். இது உங்களின் செயலில் பிரதிபலிக்க வேண்டும். களத்தில், நாட்டின் நலனை மனதில் கொண்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும். நாடு மற்றும் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும், தீவிரவாதத்துக்கு எதிராகவும் போராடி காவல்துறையினர் உயிரிழக்கின்றனர். பண்டிகை உள்பட பல நாட்கள் போலீசார் வீட்டிற்கு செல்ல முடியாது. இருப்பினும், போலீசார் என்றதும் மக்களின் எண்ணம் வேறு மாதிரியாக இருக்கிறது.

மக்கள் உங்களிடம் நன்னடத்தையை எதிர்பார்க்கிறார்கள். சமூகத்தில் உங்கள் பங்கை உணர்ந்து மக்களிடம் நட்பாக இருக்க வேண்டும். காவல்துறை, போலீசார் மீதான மக்களின் தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும். கொரோனா தொற்று காலத்தில், போலீசார் உதவியதை பார்த்து மக்கள் தங்களின் எண்ணத்தை மாற்றி கொண்டார்கள். ஆனால், தற்போது அது மீண்டும் பழைய நிலைக்கு சென்று விட்டது. இளைய தலைமுறையினரான உங்களிடம்தான் அதனை மாற்றும் சக்தி இருக்கிறது. கடந்த 75 ஆண்டுகள் சிறந்த காவல்துறையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அண்மை காலங்களில், காவல் பயிற்சி தொடர்பான உள்கட்டமைப்புகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நீங்கள் தற்சார்பு இந்தியாவை முன்னெடுத்து செல்ல வேண்டும்.இது நாட்டின் முன்னேற்றத்துக்கான முக்கியமான கால கட்டம். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Related Stories: