4 ஆண்டு தொகுதி பக்கமே தலைகாட்டாத பாஜ எம்எல்ஏ.வை கழிவுநீரில் நடக்க வைத்த கிராம மக்கள்: உபி.யில் பதிலடி சம்பவம்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. அங்கு, ஆளும் பாஜ கட்சி எப்படியும் ஆட்சியை தக்க வைக்க வேண்டுமென்பதில் குறியாக உள்ளது. இதனால், இதுவரை மக்கள் பணியே செய்யாத எம்எல்ஏக்களும், தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் மீரட் மாவட்டம் கர்முக்தேஸ்வர் தொகுதி பாஜ எம்எல்ஏ கமல் மாலிக். இவர் பாத யாத்திரை பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார். 4ம் நாள் பாத யாத்திரையாக ஹபூரின் நானாய் பகுதியில் உள்ள தோல்புர் கிராமத்துக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். 4 ஆண்டுக்கு முன், இத்தொகுதியில் வென்ற கமல் மாலிக் அதன் பின் தோல்புர் கிராமத்து பக்கமே தலைகாட்டவில்லை.

இதனால், இம்முறை தொகுதி பக்கம் வரும் எம்எல்ஏவை சும்மாவிடக்கூடாது என கிராம பஞ்சாயத்தில் மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, கிராமத்துக்கு வந்த எம்எல்ஏ கமல் மாலிக், கிராம மக்கள் தெருவில் நடக்க வைத்து அழைத்துச் சென்றனர். அங்கு மோசமான சாலையால் பல காலமாக கழிவுநீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது. இதை சரி செய்யபல அதிகாரிகளிடம் முறையிட்டும் எதுவும் நடக்கவில்லை. இதற்காக எம்எல்ஏவை மக்களால் சந்திக்கவும் முடியவில்லை. இதற்கெல்லாம் பதிலடியாக, தேங்கிய கழிவுநீரில் அவரை நடக்க வைத்து சுற்றிக் காட்டினர். இதில்தான் தினமும் தாங்கள் சென்று வருவதாகவும், வீடுகள் முன் கழிவுநீர் தேங்கியிருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் கூறி உள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி கடும் வைரலாகி உள்ளது.

Related Stories: