செம்பாக்கம் கிராமத்தில் 51 இருளர் குடும்பங்களுக்கு பசுமை வீடுகள்: அமைச்சர்கள் வழங்கினர்

திருப்போரூர்: செம்பாக்கம் கிராமத்தில் 51 இருளர் குடும்பங்களுக்கு ரூ.1.53 கோடியில் 51 பசுமை வீடுகளை அமைச்சர்கள் பெரிய கருப்பன், தா.மோ.அன்பரசன் திறந்து வைத்து பயனாளிகளிடம் ஒப்படைத்தனர். திருப்போரூர் ஒன்றியம் செம்பாக்கம் ஊராட்சியில் கடந்த ஆண்டு 51 இருளர் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது. இந்த வீட்டு மனையில் தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.3 லட்சம் செலவில் மொத்தம் ரூ.1.53 கோடி மதிப்பில் 51 வீடுகள் கட்டும் பணி சமீபத்தில் தொடங்கியது. முதல்கட்டமாக பணி நிறைவடைந்த 7 பேருக்கு பசுமை வீடுகள் ஒப்படைக்கும் விழா நேற்று நடந்தது. செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். திருப்போரூர் ஒன்றிய ஆணையர் வெங்கட்ராகவன் வரவேற்றார். காஞ்சிபுரம் எம்பி செல்வம், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன், ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு, புதிய வீடுகளை திறந்து வைத்து பயனாளிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், கூடுதல் பயனாளிகளுக்கான வீடுகள் கட்டுமானப் பணிகளை அவர்கள் தொடங்கி வைத்தனர். அந்த குடியிருப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகள், சாலை, தெரு மின் விளக்கு உள்பட அடிப்படை வசதி திட்டங்களையும் அமைச்சர்கள் பொது மக்களுக்கு அர்ப்பணித்தனர்.

தொடர்ந்து அதே வளாகத்தில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் சார்பில் 1500 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் கோபால், மாவட்ட திட்ட அலுவலர் ஸ்ரீதர், முன்னாள் எம்எல்ஏ இதயவர்மன், திருப்போரூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பையனூர் சேகர், நகர திமுக செயலாளர் தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அமைச்சர்களுக்கு இருளர் பழங்குடி மக்கள், தங்களது பாரம்பரிய இசைக் கருவிகள் மூலம் இசைத்து பாடல் பாடி, நடனமாடி, தலையில் பூச்சூடி வரவேற்றனர்.

* 1450 பேர் திமுகவில் இணைந்தனர்

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள வெங்காடு, கொளத்தூர், மேட்டுப்பாளையம் உள்பட பல ஊராட்சிகளில் இருந்து அதிமுக, அமமுக உள்ளிட்டபல்வேறு கட்சிகளை சேர்ந்த கொளத்தூர் முனுசாமி, மேட்டுப்பாளையம் வேலு, இருங்காட்டுகோட்டை விஜயகோபால், பென்னலூர் பாபு, வெங்காடு சீனிவாசன், சந்தவேலூர் பாண்டியன், வல்லக்கோட்டை அன்பு, மொளச்சூர் மூங்கிலான், எச்சூர் விக்னேஷ் ஆகியோர் தலைமையில் 1450 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இந்த இணைப்பு விழா ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வல்லக்கோட்டையில் நேற்று நடந்தது. ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை வகித்தார்.

ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராமமூர்த்தி வரவேற்றார். ஒன்றிய அவைத்தலைவர் மோகனன், வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் பொடவூர் ரவி, குண்ணம் முருகன், ஜார்ஜ், சந்தவேலூர் சத்யா, ஒன்றிய துணை செயலாளர் ராஜேஸ்வரி பரமசிவம், வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 1450 பேருக்கு சால்வை அணிவித்து கட்சியில் இணைத்து கொண்டார். இதில் மாவட்ட பிரதிநிதிகள் வேலுமணி, முத்துகுமாரசாமி, கணேஷ்பாபு,ஒன்றிய அமைப்பாளர்கள் மண்ணூர் சரவணன், போஸ்கோ, துணை அமைப்பாளர் தண்டலம் மனோஜ், மகளிர் அணி நிர்வாகி எறையூர் சசிரேகா சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: