காவல்துறையினருக்கு வார விடுமுறை தமிழக அரசுக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு

சென்னை: தமிழகத்தில், காவல் துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு: தேமுதிக தலைவர் விஜயகாந்த்: தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் விடுமுறை இன்றி பணியாற்றுவதால், அவர்கள் மன வேதனையும், மன சோர்வும் அடைந்தனர். பலர் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் வாரம் ஒருமுறை விடுமுறை வழங்க வேண்டும் என்று காவலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். நீண்ட ஆண்டுகளாக விடுத்து வந்த கோரிக்கையை ஏற்று, வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என தற்போது அறிவித்திருப்பது காவலர்களுக்கு இனிய செய்தி. மேலும் பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களிலும் காவலர்களுக்கு விடுமுறை அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். காவலர்களுக்கு விடுமுறை அறிவித்த டிஜிபி சைலேந்திர பாபுவுக்கும், தமிழக அரசுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழக  காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு கட்டாய வார விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருப்பது வரவேற்புக்குரியது. மேலும் அவர்கள் வார ஓய்வுநாளில் விருப்பத்துடன் பணியாற்றினால் மிகை நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதும், அவர்களின் பிறந்த நாளுக்கும் மற்றும் திருமணநாளுக்கும் விடுப்பு அளிக்க அறிவித்திருப்பதும் காவலர் பணிக்கு மேலும் ஊக்கம் அளிக்கும். பொதுவாக காவல்துறையை சேர்ந்தவர்கள் இரவு, பகல் பாராது, மக்களை பாதுகாப்பதிலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் சிறப்பாக பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். வாரம் முழுவதும் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் சில நேரங்களில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலை மாறுவதற்காகவும், காவல்துறையின் பணி மேலும் சிறக்கவும் வழிவகை செய்யும் வகையில் டிஜிபியின் அறிவிப்பு அமைந்திருக்கிறது.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்: காவல்துறை வரலாற்றில் முதன் முறையாக காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் எனவும், விடுப்பு எடுக்காமல் பணியாற்றுபவர்களுக்கு மிகை நேர ஊதியம் வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு காவல்துறை தலைமை டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கை மகிழ்ச்சியளிக்கக்கூடிய வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும். காவலர்கள் ஓய்வின்றி உழைப்பதால் கடும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டது மட்டுமன்றி, காவல் பணியிலிருந்த சிலர் தற்கொலையில் ஈடுபட்ட சம்பவங்கள் வேதனை தருவதாக இருந்தது.  தற்போது, காவலர்களின் மனச்சுமையை போக்கும் விதமாக, அவர்கள் உடல்நலன் பேணுவதற்கும், குடும்பத்துடன் போதிய நேரம் செலவிடுவதற்கும் வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாமாக்கப்பட்டிருப்பது காவல்துறையினர் மட்டுமன்றி பொதுமக்களிடமும் வரவேற்பு பெற்றுள்ளது. இத்தகைய ஆணை பிறப்பித்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.   இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: காவலர்களுக்கு வார விடுமுறை கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. டிஜிபி சைலேந்திர பாபு பிறப்பித்துள்ள உத்தரவுகள் நம்பிக்கை அளிக்கின்றன. மகிழ்ச்சியான பணிச்சூழலில் தமிழக காவல்துறை இந்தியாவுக்கே முன்னோடியாக திகழ வேண்டும்.

Related Stories:

>