பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்க மோடி, அமித்ஷா தயங்குவது ஏன்? தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கேள்வி

சென்னை: ‘பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மோடி, அமித்ஷா விவாதிக்க தயங்குவது ஏன் என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் எதிர்கால செயல் திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தேசிய செயலாளர்கள் சிரிவல்ல பிரசாத், சி.டி.மெய்யப்பன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஜெயக்குமார் எம்பி, காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன், ஊடகத்துறை தலைவர் கோபண்ணா, பொதுச்செயலாளர்கள் காண்டீபன், சிரஞ்சீவி, மாவட்ட தலைவர்கள் எம்.பி.ரஞ்சன்குமார், எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், முத்தழகன், அடையாறு துரை, நாஞ்சில் பிரசாத் உள்பட மாநில-மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கட்சி வளர்ச்சிப்பணிகள், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டம் முடிவில் தினேஷ் குண்டுராவ் அளித்த பேட்டியில், ‘‘ பெகாசஸ் விவகாரத்தில் எந்தவித விசாரணையையும் முன்னெடுக்க மத்திய அரசு தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. இந்த விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. ஆனாலும் இதுகுறித்து விவாதிக்க பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பயப்படுகிறார்கள். இதில் இருந்தே இந்த விவகாரத்தில் மோடி, அமித்ஷாவுக்கும் தொடர்பு இருப்பது தெளிவாக விளங்குகிறது. பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்ந்து விட்டது. ஆனால் இதற்கெல்லாம் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வாயை திறக்க மறுக்கிறார்’’ என்றார்.

Related Stories:

>