தந்தை வாங்கிய கடனுக்கு மகனை கடத்தி தாக்குதல்: 2 கந்து வட்டிக்காரர்கள் கைது; முக்கிய குற்றவாளிகளுக்கு வலை

ஆவடி: ஆவடி கொள்ளுமேடு காமராஜர் தெருவை சேர்ந்தவர் மணி(41), பாய் வியாபாரி. இவரது மகன் சேகர்(21). கடந்த 8 ஆண்டுக்கு முன்பு மணி வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக மதுரவாயல் சேர்ந்த சண்முகத்திடம், ரூ.4 லட்சம் கடனாக பெற்றார். இதற்காக, மணி தொடர்ந்து வட்டி கட்டி வந்தார். கடந்த இரு வருடமாக மணி வட்டியை சரிவர செலுத்தவில்லை என கூறப்படுகிறது. சமீபத்தில் சண்முகம் தான் கொடுத்த கடனை பல மடங்கு வட்டியுடன் திரும்ப கேட்டுள்ளார். இதற்கு, மணி விரைவில் வாங்கிய கடனை மட்டுமே திரும்ப தருவதாக கூறி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 27ம் தேதி அதிகாலை சண்முகம் அடியாட்களுடன் மணி வீட்டுக்கு வந்தனர். அப்போது, மணி இல்லாததால் அவரது மகன் சேகரை வீட்டிலிருந்து கடத்தி சென்றனர். மேலும், அவர்கள் போகும்போது கடனுடன் வட்டி பணத்தை கொடுத்துவிட்டு, சேகரை அழைத்து செல்லுமாறு வீட்டில் இருந்தவர்களிடம் கூறி சென்றனர். பின்னர், மணி சண்முகத்தை சந்தித்து ரூ.2 லட்சம் கொடுத்து, சேகரை மீட்டு வந்துள்ளார். அப்போது, சேகரை கந்து வட்டி கும்பல் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மணி ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதற்கு, போலீஸ் தரப்பில் சரியான நடவடிக்கை இல்லை.

இதனையடுத்து மணி, தனது மகன் சேகருடன் சென்னை எழும்பூரில் உள்ள கமிஷனர் அலுவலகத்திற்கு கடந்த 28ம் தேதி சென்றார். பின்னர், அங்கு, மணி, தனது மகனுடன் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த, அங்கிருந்த காவலர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தினர். இதன் பிறகு, உயர் அதிகாரிகள் மணியிடம், அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், உயரதிகாரிகள் உத்தரவின்பேரில், ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கிருஷ்ணகுமார் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், சேகரை கடத்தி சென்ற கந்து வட்டி கும்பலை சேர்ந்த ஆவடி, பருத்திப்பட்டை சேர்ந்த பாஸ்கர்(33), நெற்குன்றம் ஏரிக்கரை சேர்ந்த ராஜேந்திரன்(45) ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளியான கந்து வட்டிக்காரர் மதுரவாயிலை சேர்ந்த சண்முகம் உள்ளிட்டோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: