கணவனுடன் சேர்த்து வைக்ககோரி மாமியார் வீட்டு முன்பு இளம்பெண் போராட்டம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் சாலையில் வசித்து வருபவர் பிரமோத்(23), பொன்னேரி அரசு கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்தார். அதே கல்லூரியில் படித்து வந்த சோழவரம் தோட்டக்கார தெருவை சேர்ந்த ஏசுவின் மகள் சித்ரா(22), பிஎஸ்சி படித்துள்ளார். இருவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 26ம் தேதி சென்னையில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திருமணம் முடிந்தவுடன் இருவரும் மாதவரம் அருகே மாத்தூரில் தனிக்குடித்தனம் சென்றனர். 6 மாதத்திற்கு பிறகு காதல் திருமணத்தில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு குடும்ப தகராறு ஏற்பட்டது.

இதில் சித்ரா பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், பிரமோத் தனக்கு விவகரத்து கேட்டு சென்னை நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அந்த விசாரணையும் நடைபெற்று வந்தது. இதில் அடுத்த மாதம் 10ம் தேதி நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜராகும்படி நீதிபதிகள் கூறியிருந்தனர். இந்நிலையில், தன்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என சித்ரா நேற்று ஊத்துக்கோட்டையில் உள்ள கணவரின் வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். இதையறிந்த சித்ராவின் மாமியார் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே சென்று விட்டார்.

Related Stories:

>