இந்துக்களுக்கு மட்டும் கட்டுப்பாடு ஏன்? வழிபாட்டு தலங்களை நிர்வகிக்க எல்லா மதத்துக்கும் ஒரே விதிமுறை: உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு

புதுடெல்லி: `சமூகத்தின் பிற பிரிவினர்கள் போல இந்துக்களும் மத, அறக்கட்டளை நிர்வகிக்க பொதுவிதியை வரையறுக்க வேண்டும்,’ என்று இந்து மதகுரு சுவாமி ஜிதேந்திரானந்த் சரஸ்வதி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சுவாமி ஜிதேந்திரானந்த் சரஸ்வதி என்பவர் தனது வழக்கறிஞர் சஞ்சய் குமார் பதாக் மூலம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: முஸ்லிம், கிறிஸ்தவர் மற்றும் பார்சி சமூகத்தினர் தங்களின் மதம் அல்லது அறக்கட்டளைஅமைக்கவும், அதன் சொத்துக்களை நிர்வகிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று இந்துக்கள், ஜெயின்கள், பவுத்தர்கள், சீக்கியர்களும் மதம், அறக்கட்டளை அமைக்கவும் அதனுடைய அசையும் மற்றும் அசையா சொத்துகளை நிர்வகிக்கவும் உரிமை உள்ளது.

ஆனால், இந்து, சீக்கியர்கள் போன்ற குறிப்பிட்ட சமூகத்தினரின் புண்ணிய ஸ்தலங்களை மட்டும் அரசு கட்டுப்படுத்துவது ஏன்? இதன் மூலம் மத நிர்வாக விவகாரங்களில் தலையிட்டு, மாநில அரசுகள் தான் பிரிவினையை ஏற்படுத்துகின்றன. மத விவகாரங்களை நிர்வகிப்பதில் மதங்களுக்கு இடையே எந்த பாகுபாடும் இல்லை என்று அரசியலமைப்பு சட்டத்தின் 26, 27 பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மதத்தினருக்கும் தனிப்பட்ட சடங்கு, சம்பிரதாய, வழிபாட்டு முறைகள் உள்ளன. இந்த மத விவகாரங்களை நிர்வகிப்பதில் மாநில அரசுகள் அரசியலமைப்பு ரீதியாக தகுதியற்றவையாக இருக்கின்றன. எனவே, வழிபாட்டு தலங்கள், அறக்கட்டளைகளை நிர்வாகம் செய்வதில், எல்லா மதத்தினருக்கும் ஒரே மாதிரியான விதிமுறையை கொண்டு வரும்படி ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>