ஒட்டு கேட்பு விவகாரத்தால் நடவடிக்கை பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்த பல்வேறு நாடுகளுக்கு என்எஸ்ஓ தடை: 40 நாடுகளை சேர்ந்த 60 அமைப்புகள் பயன்படுத்துகின்றன

வாஷிங்டன்: இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பு தனது உளவு மென்பொருளை பயன்படுத்த பல்வேறு நாடுகளின் அரசு நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் சைபர் பாதுகாப்பு நிறுவனமான என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருளைக் கொண்டு உலகின் பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களின் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பென்னி கன்ட்ஸ் உறுதி அளித்திருந்தார். அதன்படி, கடந்த புதன்கிழமை முதல் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் இது தொடர்பாக என்எஸ்ஓ அமைப்பிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், என்எஸ்ஓ அமைப்பு தனது உளவு மென்பொருளை பயன்படுத்த பல்வேறு நாடுகளின் அரசு நிறுவனங்களுக்கு தடை விதித்திருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து என்எஸ்ஓ அமைப்பின் ஊழியர் ஒருவர் தெரிவிக்கையில், `இஸ்ரேலிய பாதுகாப்பு விதிமுறைகள் நிறுவனம், ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் எந்த நிறுவனங்கள் ஒட்டு கேட்பதில் ஈடுபட்டன என்பதை அடையாளம் கண்டு அவற்றுக்கு தடை விதிக்க கூறியுள்ளது. இதனால், புலனாய்வு நடந்து வரும் சில அரசு நிறுவனங்கள் உளவு மென்பொருளை தற்காலிகமாக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த நாடு, எந்த நிறுவனம் போன்ற விவரங்களை தற்போது வெளியிட முடியாது,’ என்று கூறினார். இதனிடையே, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `டெல் அவிவ் அருகே ஹெர்ஸ்லியா பகுதியில் உள்ள என்எஸ்ஓ அலுலகத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த புதன்கிழமை சோதனை நடத்தினர்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 40 நாடுகள் பயன்படுத்துகின்றன

என்எஸ்ஓ அமைப்பின் பிரதிநிதியாக செயல்படும் மெர்குரி பொது விவகார நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், `இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு முழு வெளிப்படைத்தன்மையுடன் ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறது. என்எஸ்ஓ அமைப்பை பற்றி ஊடகங்களில் வெளியான குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதை இந்த புலானய்வு முடிவுகள் உறுதிப்படுத்தும். ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகும் முன்பே, சமீபத்தில் 5 அரசு நிறுவனங்களுக்கு அதனை பயன்படுத்த என்எஸ்ஓ தடை விதித்துள்ளது. 40 நாடுகளை சேர்ந்த புலனாய்வு, சட்ட அமலாக்க அமைப்புகள், ராணுவம் உள்பட 60 துறைகள் உளவு மென்பொருளை பயன்படுத்துகின்றன,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: