தமிழகத்தில் இருந்து என்ன எதிர்ப்பு வந்தாலும் மேகதாது திட்டத்தை நிறைவேற்றுவது உறுதி: கர்நாடக முதல்வர் பொம்மை பேட்டி

பெங்களூரு: ‘காவிரியின் குறுக்கே மேகதாது கட்டும் பணிக்கு ஒன்றிய அரசின் அனுமதி பெற்று நிறைவேற்றுவது உறுதி. தமிழகத்தில் இருந்து எந்தவித எதிர்ப்பு வந்தாலும் அதுபற்றி கவலைப்பட மாட்டோம்,’ என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். கர்நாடக பாஜ அரசு மேகதாதுவில் அணை கட்டுவதில் தீவிரம் காட்டுவதை கண்டித்து, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஆகஸ்ட் 5ம் தேதி டெல்டா பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் செய்தியாளர்கள் டெல்லியில் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், ‘மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஆக.5ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். அவர் அவரது பணியை செய்யட்டும். அதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக மாநிலத்துக்கு அனைத்து உரிமையும் உள்ளது. பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக இந்த அணை கட்டப்படுகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி  கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அண்ணாமலை சாப்பிட்டால் எனக்கென்ன சாப்பிடாமல் இருந்தால் எனக்கென்ன. தமிழகத்தில் இருந்து எந்தவித எதிர்ப்பு வந்தாலும் மேகதாது திட்டத்தை நிறைவேற்றுவது உறுதி’. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: