முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாநில அரசுகளின் அதிகாரம் பறிப்பு

* ஒன்றிய அரசே கவுன்சலிங் நடத்த திட்டம்

* வரைவு அறிக்கை வெளியானதால் பல்வேறு அமைப்புகள் கண்டனம்

புதுடெல்லி: முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், மாநில அரசுகளுக்கான இடஒதுக்கீடு இடங்களையும் ஒன்றிய அரசே நிரப்பும் என தேசிய மருத்துவ ஆணையம் வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் செயல் என பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியாவில் உள்ள அனைத்து ஒன்றிய மற்றும் மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 15%, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 50% இடங்களும் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன. ஆனால், அந்த இடங்களில் ஓரிடம் கூட பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படுவதில்லை. கடந்த ஜூலை 12ம் தேதி பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இல்லாமலேயே நீட் தேர்வு நடைபெறும் என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.

இதற்கிடையே, தமிழகத்தில் பொது, பல் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ‘பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவை ஒன்றிய அரசு தற்போது அறிவிப்பாக வெளியிட உள்ளது,’ என ஒன்றிய அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது. அதன்படி, மாநில அரசு நடத்திவரும் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) 27 சதவீதமும், உயர் பிரிவு ஏழைகளுக்கான, அதாவது பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடும் நடப்பு கல்வியாண்டிலேயே வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது.  

இவ்வாறு தமிழக அரசு போராடி பெற்ற இடஒதுக்கீடு முறைக்கு மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது, மருத்துவ மேற்படிப்புகளில் மாநில அரசுக்கு 50%, ஒன்றிய அரசுக்கு 50% ஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது. மாநில அரசுக்கு உள்ள 50 சதவீதத்திற்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசே நடத்தி வருகிறது. ஆனால், தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையில், மாநில அரசுக்கு கீழ் உள்ள 50% இடத்தையும் ஒன்றிய அரசே பொது கவுன்சலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என கூறி கருத்து கேட்கப்பட்டுள்ளது.  

தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையில், அனைத்து மருத்துவ கல்வி நிறுவனங்களிலும் அனைத்து முதுநிலை பட்டப்படிப்பு சிறப்பு படிப்புகளுக்கும் (டிப்ளமோ/எம்.டி/எம்எஸ்), அனைத்து முதுகலை சூப்பர் சிறப்பு பாடத்திட்டங்களுக்கு (டி.எம்/எம்சிஎச்) பொது கவுன்சலிங் நடத்த திட்டமிட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. இதற்கு, பல்வேறு மருத்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சமூக சமத்துவதற்கான டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் சாந்தி கூறுகையில், ‘‘மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமிருந்து பறிக்க ஒன்றிய அரசு முயல்கிறது.

ஒன்றிய சுகாதாரத் துறையே மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது, மாநில உரிமைக்கு எதிரானது. நீட் தேர்வு அறிவிக்கும்போது மாநில உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ள வாக்குறுதிகளை மீறுகிறது. ஏற்கனவே, முதுநிலை மருத்துவ மாணவர்கள் 3 மாதம் மாவட்ட மருத்துவமனைகளில் வேலை பார்க்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் அறிவிப்பால், இளம் மருத்துவர்கள் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பயிற்சி மருத்துவர்கள் ஒரு வாரம் ஆயூஸ் துறையில் பணியாற்ற வேண்டும் என வரைவு அறிக்கை வெளியிட்டது. இவ்வாறு, ஒவ்வொன்றுக்கும் வரைவு அறிக்கை வெளியிட்டு, மாநில உரிமைகள் மற்றும் மருத்துவ இடங்களை பறிக்க பார்க்கிறது. அடுத்ததாக எம்பிபிஎஸ் இடதுக்கீட்டில் மாநில அரசுக்கு வழங்கப்பட்டும் 85 சதவீதத்திலும் கைவைப்பார்கள். இதுகுறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று முன்தினம் நேரில் மனு கொடுத்து உள்ளோம்.’’ என்றார்.

* 2 மாதம் முன்பே எதிர்ப்பு

முதுநிலை படிப்புகளில் மாநில அரசுக்கு உள்ள 50% ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கையை ஒன்றிய அரசே நடத்த முடிவு செய்து, இதற்கான ஆலோசனை கூட்டம் காணொலி மூலம் கடந்த 2 மாதங்களுக்கு முன் நடத்தப்பட்டது. தமிழகம் சார்பில் கலந்து கொண்ட மாநில மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகள் உட்பட அனைவரும் ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

* உயர் கல்வி படிப்பு ஒதுக்கீடும் போச்சு

முதுநிலை உயர் கல்வி மருத்துவ படிப்புக்கு (டி.எம்/எம்சிஎச்) மாநில அரசின் ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மாநில அரசு கல்லூரிகளில் 369 சீட் உள்ளது. இந்த ஒதுக்கீட்டில் அனைத்து சீட்டுகளையும் மாநில அரசே நிரப்பி வந்தது. இதை எதிர்த்து, 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் 4 மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கில், ஒன்றிய அரசுக்கும் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், ஒன்றிய அரசு தற்போது அனைத்து சீட்டுகளையும் எடுத்து கொண்டது. இப்படிப்புக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்துவதில்லை. இதை எதிர்த்து, அப்போதைய அதிமுக அரசு மேல்முறையீடு செய்யவில்லை.

Related Stories:

>