தமிழகம் முழுவதும் ஒருவாரத்திற்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்; கொரோனா 3-வது அலை வருமா என்பது உறுதியாக தெரியாவிட்டாலும் அதை தடுக்க நடவடிக்கை தீவிரம்: ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழகம் முழுவதும் ஒருவாரத்திற்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். கொரோனா மூன்றாவது அலை வருமா? என்பது உறுதியாக தெரியாவிட்டாலும் அதை தடுக்க நடவடிக்கை தீவிரம், மேலும் 25 % படுக்கைகள் குழந்தைகளுக்கு அமைக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். கொரோனா பெருந்தொற்றை தவிர்க்கும் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார துவக்கவிழா இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய அளவில் கேரளா, ஆந்திரா மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் உறுதியாக பொதுமக்கள் இயக்கமாக மாற்றுவதற்காக ஒரு வாரத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்காக கலைவாணர் அரங்கத்தில் இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்புகளை நாடுகிறோம். பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்.

அதே நேரத்தில் 15-21 மாவட்டங்களில் சற்று ஏற்றங்கள் காணமுடிகிறது. இந்த நேரத்தில் தான் கவனமாக இருக்க வேண்டும். நம்மால் மற்றவர்களுக்கு பரவக்கூடாது, நமக்கு மற்றவர்களிடம் இருந்து வரக்கூடாது என்ற எண்ணத்தில் மூன்றாவது அலை தடுப்பதற்கான உக்திகள் அனைத்தையும் முதல்வர் குறும்படம் மூலமும், அறிக்கையின் மூலமும் வெளியிட்டுள்ளார். அதன்படி மாவட்டம் வாரியமாக ஒரு வார காலத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மேலும் மார்க்கெட் பகுதிகள், மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மூன்றாவது அலை வருமா? வராதா? என்ற தனிப்பட்ட கருத்துகளை கூறாமல் பொதுசுகாதார வல்லுநர்கள் அடிப்படையில் கூற முடியும். அதை தான் மத்திய, மாநில அரசுகள் நமக்கு கூறுகின்றனர். எந்தெந்த பகுதிகளில் கூடுதல் நோய் வருகிறதோ அந்த பகுதிகளில் மரபுகள் ரீதியாக நமக்கு வந்தது என்றால் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் சென்னையை பொறுத்தவரை 90 சதவீதம் டெல்டா வைரஸ் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் ஏற்கனவே எத்தனை பேருக்கு நோய் வந்துள்ளது, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு இருக்கிறது என்றும், 2 கோடிக்கு மேல் தடுப்பூசி செலுத்தினால் கூட எந்தெந்த மாவட்டங்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதோ அந்த மாவட்டங்களில் கூடுதலாக தடுப்பூசி செலுத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

 

மத்திய அரசு நாள் ஒன்றுக்கு 650 கே.எல் ஆக்சிஜன் நமக்கு ஒதுக்கியுள்ளனர். ஆனால் நமக்கு 150 கே.எல் தான் தேவைப்படுகிறது. மேலும் ஆக்சிஜன் செறிவூட்டிகள்,  கான்சன்ரேட்டர், 110 இடங்களில் ஆக்சிஜன் ஜெனரேட்டர் நிறுவப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மூன்றாவது அலை வந்தால் குழந்தைகளை தாக்கும் என்று வல்லுநர்கள் அதிகார பூர்வமாக கூறாவிட்டாலும் முதல்வர் 25 சதவீதம் ஆக்சிஜன் படுக்கைகள் குழந்தைகளுக்கு அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பூரணலிங்கம் தலைமையில் குழுக்கள் மாநில சுகாதாரத்துறைக்கும் மற்ற துறைகளுக்கும் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்குகின்றனர்.

உலக சுகாதார நிறுவனம் கூறுவது என்னவென்றால் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் தான் நோய் குறைந்தது. எனவே 40 ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ள நிலையில் நமக்கு நோய் தொற்று இல்லை என்று நினைத்து விடக்கூடாது என்பதற்காக தான் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியாகும். மேலும் வீட்டில் தனிமை படுத்தக்கூடாது என்பது இல்லை முடிந்த அளவு மருத்துவமனைக் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். சோதனை செய்வது, அவர்களை கண்டறிவது, சிகிச்சை அளிப்பது, தடுப்பூசி வழங்குவது என்பது மத்திய அரசு வழங்கிய ஆலோசனைகள் ஆகும். தமிழகத்தில் பரிசோதனைகள் 1.60 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

Related Stories: