அதிமுக ஆட்சியில் 27 கோடியாக இருந்தது: தெரு விளக்கு பராமரிப்புக்கான டெண்டர் 20 கோடியாக குறைப்பு: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: தெரு விளக்குகள் பராமரிப்புக்கான ஆண்டு டெண்டர் தொகையை குறைத்து நடவடிக்கை, ஆண்டுக்கு ரூ.20 கோடியாக மாற்றியமைப்பு இதனால் ஏழு கோடி வரை மிச்சமாகும். மேலும் விளக்குகளை முறையாக பராமரிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தெருக்கள், உட்புற சாலைகள், பிரதான சாலைகளில் இரவு நேர வெளிச்சத்திற்காக கம்பங்களில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வாறாக 10 மண்டலங்களில் சுமார் 1.75 லட்சம் தெரு விளக்குகள் தினந்தோறும் இயங்குகின்றன. மேலும் தெரு விளக்குகளை பராமரிக்க கடந்த அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு ரூ.27 கோடி மதிப்பில் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டது.

இந்நிலையில் தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கவில்லை, விளக்குகள் பழுதானால் உடனடியாக மாற்றப்படுவதில்லை என்று பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆண்டு பராமரிப்புக்கான டெண்டர் தொகை அதிகமாக உள்ளது என்றும் புகார்கள் எழுந்தன. மேலும் ஏற்கனவே பல்வேறு டெண்டர்கள் முறைகேடுகள் நடந்திருப்பதாக வந்த புகார்களை விசாரித்து அவற்றை ரத்து செய்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதைப்போன்று தெருவிளக்குகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்ட சென்னை மாநகராட்சி, தெரு விளக்குகள் பராமரிப்புக்கான ஆண்டு டெண்டர் தொகையை குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. ஆண்டுக்கு ரூ.27 கோடி என்பதை ரூ.20 கோடியாக மாற்றியமைத்துள்ளது. இதன்படி சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி வரை மிச்சமாகும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மேலும் முறையாக விளக்குகளை பராமரிக்கவில்லை என்றால் ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: