×

சித்தாந்தத்தை காட்டிலும் ஆட்சி, அதிகாரமே முக்கியம்...பாஜகவின் 12 முதல்வர்களில் 4 பேர் ‘கட்சி தாவியவர்கள்’: ஆட்கள் இல்லாததால் பிரபலங்களை வளைத்து போடும் பின்னணி

புதுடெல்லி: நாடு முழுவதும் பாஜக ஆளும் 12 மாநில முதல்வர்களில் 4 மாநில முதல்வர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள் ஆவர். பாஜகவில் பல மாநிலங்களில் ஆட்கள் இல்லாததால், தனது சித்தாந்தங்களை ஓரம்கட்டிவிட்டு பிரபலங்களை வளைத்து போட்டு ஆட்சி நடத்தி வருகிறது. ஆளும் ஒன்றிய பாஜக அரசின் தாய் அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) மற்றும் அதன் சார்பு அமைப்பை சேர்ந்தவர்கள் தான், முக்கிய அதிகார மற்றும் உயர் பதவியில் அமர்த்தப்படுகிறார்கள் என்ற கருத்து பரவலாக உள்ளது. பல மாநிலங்களில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. ஆட்சி அதிகாரம் வேண்டுமானாலும், கட்சியின் உயர் பதவியை அடைய வேண்டுமானாலும், ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து வந்திருக்க வேண்டும் என்பது எழுதப்படதாத விதியாக உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு மட்டுமே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் உயர் பதவிகள் கிடைத்துள்ளதை கடந்தகால நிகழ்வுகள் கூறுகின்றன.

இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் பின்னணியில் இல்லாதவர்களும், ஒன்றிய மற்றும் மாநில அரசுப் பதவிகளில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும் 12 மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு பதவியில் உள்ள 12 முதல்வர்களில் நான்கு முதல்வர்கள் வெவ்வேறு கட்சிகளில் இருந்து பாஜகவுக்கு தாவியவர்கள் ஆவர். இவர்களுக்கு ஆர்எஸ்எஸ் பின்புலம் இல்லை என்றாலும், முதல்வர் பதவியை அடைந்துள்ளனர். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடக முதல்வராக பதவியேற்ற பசவராஜ் பொம்மை, ஜனதா பரிவார் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவியவர்.
இவரது தந்தை எஸ்ஆர் பொம்மை, 1989ம் ஆண்டுவாக்கில் ஜனதா பரிவார் கட்சியின் 9 மாத கர்நாடக முதல்வராக பதவியில் இருந்தார். தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை, ஜனதா தளம் கட்சியின் சார்பில் இரு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 2004ல், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2008ல் காங்கிரஸ் கட்சியில் சேர முயன்றார். அங்கு அவருக்கு எம்எல்ஏ சீட் தராததால், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து பாஜகவில் இணைந்தார். அதன்பின் அதே ஆண்டு நடந்த ஷிகானி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். தற்போது பாஜகவின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

* அடுத்ததாக அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராவார். ஆனால், அவர் தற்போது பாஜகவின் முதல்வராக உள்ளது. பெமா காண்டுவின் தந்தை டோர்ஜி காண்டு, இரண்டு முறை காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்தார். ஆனால், கடந்த 2011ல் டோர்ஜி காண்டா ஹெலிகாப்டர் விபத்தில் இறந்ததால், தனது தந்தையின் சட்டமன்றத் தொகுதியான முக்தாவோ தொகுதியில் இருந்து, பெமா காண்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின், 2016ம் ஆண்டு வாக்கில் காங்கிரஸ் முதல்வராக பெமா காண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து 2 மாதம் மட்டுமே காங்கிரஸ் முதல்வராக இருந்த பெமா காண்டு, தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 43 பேருடன் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அதன்பின், பாஜகவின் முதல்வராக நீடிக்கிறார். மேலும், அருணாச்சல பிரதேசத்தின் முதல்வராக இருந்த ஜெகாங் அபாங்கு என்பவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆவார். இவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து முதல்வர் ஆனார். இப்போது இவர் பாஜகவில் இருந்து விலகி ஜேடிஎஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

* அசாம் முதல்வர் ஹேமந்த் பிஸ்வா சர்மா, 2015ம் ஆண்டு ஆகஸ்ட் வரை காங்கிரஸ் கட்சியில் இருந்தார். முன்னாள் முதல்வர் தருண் கோகாய் ஆட்சியில் மிகவும் செல்வாக்கு மிக்க அமைச்சராக இருந்தார். இருப்பினும், 2016 சட்டமன்றத் தேர்தலில் தான் முதல்வர் வேட்பாளராக இருக்க விருப்பம் தெரிவித்தார். அவரது விருப்பம் நிறைவேறாத நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் சேர்ந்தார். பின்னர் 2016ம் ஆண்டில் நடந்த அசாம் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதால், சர்பானந்தா சோனாவால் முதல்வரானார். ஹேமந்த் பிஸ்வா சர்மா நிதியமைச்சரானார். தற்போது நடந்த பேரவை தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்ததால், ஹேமந்த் பிஸ்வா சர்மா முதல்வராகவும், சர்பானந்தா சோனாவால் ஒன்றிய அமைச்சராகவும் பதவி வகித்து வருகின்றனர்.

* மணிப்பூர் முன்னாள் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். 2017ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் சூழலில் இருந்தது. ஆனால், அம்மாநில ஆளுநர், பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார். அதாவது, கூட்டணி கட்சிகளான நாகா மக்கள் முன்னணி மற்றும் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. மணிப்பூர் முதல்வராக பீரன் சிங் ஆட்சி செய்து வருகிறார். இவர், ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தார்.  மேற்கண்ட 4 மாநில முதல்வர்களில் மணிப்பூர், அசாம், அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மூன்று பேர் உள்ளனர். இவர்கள் மூன்று பேரும் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள். வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவுக்கு என்று பிரத்யேக வாக்குவங்கி இல்லாவிட்டாலும் கூட, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தனது சித்தாந்தங்களை ஓரம்கட்டி வைத்துவிட்டு, மாற்றுக் கட்சியில் உள்ள தலைவர்களை இழுத்து போட்டு ஆட்சியை நடத்தி வருகிறது. இவ்வாறாக, வடகிழக்கு மாநிலங்களில் இன்று பெரும்பான்மையாக பாஜகவின் ஆட்சி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய அமைச்சர்கள் யார்?
மாற்றுக் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவியவர்களில் பட்டியலில் பலர் இருந்தாலும், இன்றைய நிலையில் ஒன்றிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஜோதிராதித்ய சிந்தியா (காங்கிரஸ்), நாராயண் ராணே (சிவசேனா (1968-2005), காங்கிரஸ் (2005-2017), மகாராஷ்டிரா சுவாபிமான் பக்ஷா (2019 வரை)) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பிருந்தே, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்களை தனது கட்சியில் பாஜக இணைத்துக் கொண்டது. குறிப்பாக ஆர்எஸ்எஸ் பின்புலம் இல்லாத பலருக்கு உயர் பதவிகள் வழங்கப்பட்டன. பாஜகவில் திறமையான ஆட்கள் இல்லை என்ற விமர்சனம் எழுந்ததால், ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ராணுவ அதிகாரிகளை தங்களது கட்சியில் பாஜக இணைத்துக் கொண்டது. அந்த வகையில், தற்போது ஒன்றிய அமைச்சர்களாக வி.கே.சிங், அஷ்வினி வைஷ்ணவ், ஆர்.கே.சிங் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் உள்ளனர். பல மாநிலங்களில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களை இழுத்துபோட்டு அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : BJP , Ideology, BJP
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...