வடமாநில கொள்ளையர்களால் சென்னையில் 16 இடங்களில் நிகழ்த்தப்பட்ட எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கு விரைவில் சிபிஐக்கு மாற்றம்

சென்னை: வடமாநில கொள்ளையர்களால் சென்னையில் 16 இடங்களில் நிகழ்த்தப்பட்ட எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கு விரைவில் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. சென்னையில் தரமணி, வேளச்சேரி, வளசரவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணம் எடுக்கும் வசதியுள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது கடந்த மாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கள்வர்கள் சென்னை மட்டுமின்றி புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் எஸ்பிஐ ஏடிஎம்களில் கைவரிசை காட்டியிருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. சென்னையில் நடைபெற்ற கொள்ளைகள் குறித்து முதலில் மாநகர காவல்துறை விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில் வழக்கு பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

ஏடிஎம் கொள்ளையில் வடமாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு இருப்பதை அறிந்த காவலர்கள் அரியானாவில் மேவாட் உள்ளிட்ட இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி முக்கிய குற்றவாளிகளை கைது செய்தனர். இதுவரை வடமாநிலங்களை சேர்ந்த 38 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில் ஏடிஎம் சென்சாரை செயலிழக்க வைத்து பணத்தை எடுத்து அதனை ஏடிஎம்மில் தங்களது கணக்கில் டெபாசிட் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுவரை 16 மாநிலங்களில் சுமார் 5 கோடி ரூபாய் அளவுக்கு அவர்கள் கொள்ளையடித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இவர்கள் பல்வேறு மாநிலங்களில் கொள்ளையடித்துள்ளது விசாரணையில் புலனாகி இருக்கும் நிலையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்ற பரிந்துரைக்க இருப்பதாக காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கொள்ளை வழக்கு பல மாநிலங்கள் தொடர்புடையது என்பதால் இதுகுறித்து விசாரணை செய்யக்கோரி சிபிஐ அமைப்புக்கு கடிதம் எழுதுமாறு எஸ்பிஐ வங்கிகளை அறிவுறுத்தி இருப்பதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: