இந்தியா, அமெரிக்காவுடன் மோதும் நிலையில் நூற்றுக்கணக்கான ஏவுகணை கிடங்குகளை கட்டும் சீனா: செயற்கைகோளால் அம்பலமாகும் ரகசியம்

புதுடெல்லி: சீனாவின் பொருளாதாரம் ராட்சச அளவில் வளர்ந்து இருப்பதால், எல்லை விரிவாக்க முயற்சியில் தற்போது அது ஈடுபட்டுள்ளது. இந்தியா உட்பட தனது நாட்டை சுற்றியுள்ள 17 ஆண்டை நாடுகளுடனும் அது எல்லை மோதலில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் லடாக் எல்லையில் கடந்தாண்டு முதல் அது ராணுவத்தை குவித்து, போர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல், உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவுடனும் சீனா சமீப காலமாக நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகம், ராணுவ ரீதியாக பனிப்போர் நிலவுகிறது. இந்நிலையில், சீனா தனது ராணுவ பலத்தை தொடர்ந்து பெருக்கிக் கொண்டிருக்கிறது.

இதன் ஒரு பகுதியாக, தனது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுணைகள், அணு ஏவுகணைகளை தயார்நிலையில் வைத்து பாதுகாப்பதற்கான கிடங்குகளை அது கட்டி வருகிறது. இது பற்றி அமெரிக்காவும் சில தினங்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்த நிலையில், சீனா கட்டி வரும் அணு ஏவுகணை கிடங்குகளின் புகைப்படம் செயற்கைக்கோளில் சிக்கி இருக்கிறது.

சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளின் ராணுவ நடவடிக்கை ரகசிய திட்டப்பணிகள் குறித்த புகைபடங்களை தனது செயற்கைக்கோளின் மூலம் எடுத்து வெளியிட்டு வரும், ‘பிளானட் லேப்’ நிறுவனம்தான் சீனாவின் ரகசிய கிடங்குகளின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.  இதில், சீனாவின் யுமென் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணை கிடங்கு அமைக்கும் பணிகள் பதிவாகி இருக்கின்றன. அதே நேரம், இந்த கிடங்குகளை அமைக்கும் பணி, உலக நாடுகளை ஏமாற்றும் வேலையாகவும் இருக்கலாம் என ராணுவ நிபுணர்கள் கூறி வருகி்னறனர்.

Related Stories:

>