×

சண்டையில் தவறுதலாக குண்டு பாய்ந்து சாகவில்லை மசூதியில் தஞ்சம் புகுந்த சித்திக்கை தேடி பிடித்து கொன்ற தலிபான்கள்: அமெரிக்க பத்திரிகை திடுக்கிடும் தகவல்

புதுடெல்லி: இந்தியாவை சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளரான டேனிஷ் சித்திக், பல்வேறு அரிய புகைப்படங்களை எடுத்துள்ளார். இதற்காக அவர் உயரிய விருதான புலிட்சர் விருதையும் பெற்றுள்ளார். சமீபத்தில் இவர் ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே நடக்கும் சண்டையை புகைப்படம் எடுக்கச் சென்றார். தலிபான்களின் ஆதிக்கம் மிகந்த கந்தகார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் போல்தக் பகுதியில்  தலிபான்களுக்கும். அரசுப் படைகளுக்கும் இடையே நடந்த சண்டையை புகைப்படம் எடுத்த போது, அவர் மீது தவறுதலாக குண்டு பாய்ந்து இறந்ததாக கூறப்பட்டது.

ஆனால், உண்மையில் தலிபான் தீவிரவாதிகள் அவரை தேடிப்பிடித்து சென்று, கொடூரமாக கொன்றதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவில் வெளியாகும் ‘வாஷிங்டன் எக்சாமினர்’ என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ‘சண்டையில், சித்திக்குடன் சென்ற அரசுப் படைகள் சிதறின. மூன்று வீரர்களுடன் சித்திக் தப்பிச் சென்றார். வெடிகுண்டு சிதறல்கள் தாக்கியதில் காயமடைந்த அவர், அருகில் உள்ள மசூதியில் தஞ்சம் அடைந்தார்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் மசூதியில் பதுங்கி இருப்பதை அறிந்த தலிபான்கள் அதன் மீது தாக்குதல் நடத்தி, சித்திக்கையும், அவருடன் இருந்த 3 வீரர்களை பிடித்துச் சென்றனர். சித்திக்கை அவர்கள் துப்பாக்கியால் சுட்டும், கொடூரமாக சித்ரவதை செய்தும் கொன்றனர். சித்திக்கை காப்பாற்ற முயன்ற வீரர்களும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்,’ என கூறப்பட்டுள்ளது.

நகைச்சுவை நடிகர் கொடூர கொலை
ஆப்கானிஸ்தானை சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகரான பசல் முகமது, கடந்த செவ்வாய்க் கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை தாங்கள் கொல்லவில்லை என தலிபான்கள் மறுத்து வந்தனர். இந்நிலையில், பசல் கடத்தப்படும் வீடியோ நேற்று வைரலாகியது. காரின் பின் இருக்கையில் கைகள் கட்டப்பட்டுள்ள அவர், கொடூரமாக தாக்கப்படுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, அவரை தாங்கள் தான் கொன்றதாக தலிபான்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

Tags : Taliban , Fighting, Mosque, Siddiqui, Taliban, American Press
× RELATED ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை