×

மகளிர் ஹாக்கியில் இந்தியாவுக்கு முதல் வெற்றி

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில்  இந்திய அணி அயர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்ததுடன், காலிறுதி வாய்ப்பையும் தக்கவைத்தது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, முதல்  3 லீக் ஆட்டங்களில்  உலக சாம்பியன் நெதர்லாந்து,  ஜெர்மனி,  இங்கிலாந்து அணிகளிடம் தோற்று  கடும் பின்னடைவை சந்தித்து. அதனால் காலிறுதி வாய்ப்பும் கேள்விக்குறியானது. இந்நிலையில் தனது 4வது லீக் ஆட்டத்தில் நேற்று அயர்லாந்து அணியுடன் மோதியது.  வென்றால் மட்டுமே காலிறுதி வாய்ப்பை தக்கவைக்கலாம் என்பதால் இந்திய வீராங்கனைகள் ஆரம்பம் முதலே வேகம் காட்டினர். அயர்லாந்தும் அதற்கு ஈடு கொடுக்க, ஆட்டத்தின் அனல் பறந்தது.

இந்தியாவுக்கு பல பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தும் அவற்றில் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில், இந்தியாவின் நவனீத் கவுர் அபாரமாக கோலடித்தார் (57வது நிமிடம்).  மேற்கொண்டு கோல் ஏதும் விழாததால், இந்தியா 1-0 என்ற கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. ஏ பிரிவு புள்ளிப்பட்டியலில் 5வது  இடத்தில் உள்ள நிலையில் இந்தியா காலிறுதி வாய்ப்பை  தக்கவைத்துள்ளது. இன்று நடக்கும் கடைசி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தினால் இந்தியா காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில்  இங்கிலாந்து-அயர்லாந்து இடையிலான மற்றொரு ஆட்டம் டிரா ஆக வேண்டும் அல்லது அயர்லாந்து  தோற்க வேண்டும். இதெல்லாம் நடந்தால் இந்தியா காலிறுதியில் கால் வைக்கும்.

ஆண்கள் ஹாக்கியில் அபாரம்
ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி ஏ பிரிவில் இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. முதலில் விளையாடிய 4 லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவிடம் மட்டும் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி... நியூசிலாந்து, ஸ்பெயின், அர்ஜென்டினா அணிகளுக்கு எதிராக வென்று 9 புள்ளிகளுடன் 2வது இடத்தை உறுதி செய்ததுடன் காலிறுதிக்கும் ஏற்கனவே முன்னேறி விட்டது. இந்நிலையில் கடைசி லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணியுடன் நேற்று மோதியது. 13வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் பெனால்டி வாய்ப்பில் கோலடிக்க, இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. குர்ஜன்த் சிங் 17வது நிமிடத்திலும், ஜப்பான் வீரர் கென்டா டனாகா 19வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோலடித்தனர். 2வது கால் பகுதி முடிவில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. தொடர்ந்து ஜப்பான் வீரர் கோடா வாடனாபே 33வது நிமிடத்திலும், ஷம்ஷர் சிங் 34வது நிமிடத்திலும் கோலடித்தனர்.

பரபரப்பான 4வது குவார்ட்டரில் இந்தியாவின் நீலகண்ட சர்மா (51’), குர்ஜன்த் சிங் (56’), ஜப்பான் வீரர் கசுமா முராட்டா (59’) ஆகியோர் கோலடித்தனர். ஆட்ட நேர முடிவில் இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. ஏ பிரிவில் ஸ்பெயினுடன் நேற்று டிரா செய்த ஆஸ்திரேலியா 13 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தது. இந்தியா (12 புள்ளி), அர்ஜென்டினா (7), ஸ்பெயின் (5)  அணிகளும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. நியூசிலாந்து (4), ஜப்பான் (1) அணிகள் வெளியேறின. பி பிரிவில் பெல்ஜியம் (13), ஜெர்மனி (9), இங்கிலாந்து (8), நெதர்லாந்து (7 புள்ளி) அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. தென் ஆப்ரிக்கா (4), கனடா (1) லீக் சுற்றுடன் வெளியேறின. ஆடவர் காலிறுதி ஆட்டங்கள் நாளை நடக்கிறது.

Tags : India , Olympics, women's hockey, India, victory
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!